புதிய ஹூண்டாய் வெர்னா கார் வெளியீடு: படங்களுடன் தகவல்கள்!
புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் கனடா நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடலின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் வெர்னா கார் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. ஸ்டைலான தோற்றமும், வசதிகளும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இந்த நிலையில், மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி கார்களால் ஹூண்டா வெர்னா காருக்கு தொடர்ந்து நெருக்கடி இருந்து வருகிறது.

கடும் சந்தைப் போட்டி இருப்பதால், கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா சிட்டி கார் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. மேம்படுத்தப்பட்ட மாருதி சியாஸ் காரும் விரைவில் வருகிறது. இந்த தருணத்தில் புதிய வெர்னா காரை களமிறக்குவது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு அவசியமாகி உள்ளது. அதன்படி, அடுத்த சில மாதங்களில் புதிய ஹூண்டாய் வெர்னா கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் அடிபட்டு கொண்டிருந்தன.

அதனை உறுதிப்படுத்தும் விதத்தில், கனடா நாட்டின் டொரன்டோ நகரில் நடந்து வரும் வாகன கண்காட்சியில் புதிய ஹூண்டாய் வெர்னா கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் புதிய வெர்னா கார் வெகுவாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் கனடா நாட்டு தலைநகர் டொரன்டோவில் நடந்த வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்த புதிய ஹூண்டாய் வெர்னா கார் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

புதிய வெர்னா காரின் க்ரில் அமைப்பு வெகுவாக மாறி இருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ள ஹெட்லைட் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூரை அமைப்பும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

பின்புறத்திலும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. டெயில் லைட் க்ளஸ்ட்டர் முற்றிலும் மாறுபட்ட டிசைனில் இருப்பதுடன், புதிய பம்பர் காரின் அழகை கூட்டுகிறது. இந்த காரில் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் நீளத்திலும் 70 மிமீ வரையிலும், அகலத்தில் 29 மிமீ வவரையிலும் கூட்டப்பட்டுள்ளது. வீல்பேஸ் 10 மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், உட்புறத்தில் இடவசதி மிகச் சிறப்பாக மேம்பட்டிருக்கும் என்று நம்பலாம்.

வெளிப்புறம் போன்றே இன்டீரியரிலும் வழக்கம்போல் மிகவும் பிரிமியமாக இருக்கிறது. 5 அல்லது 7 இன்ச் டிஎஃப்டி எல்சிடி கலர் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் சப்போர்ட் செய்யும்.

கனடா மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஹூண்டாய் வெர்னா காரில் 132 பிஎஸ் பவரை அளிக்கவல்ல 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. டார்க் திறன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் ரேடார் துணையுடன் இயங்கும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புற மோதல்களை இந்த பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக தவிர்க்க முடியும்.

அதேநேரத்தில், இந்தியாவில் இருக்கும் ரேடார் அலைவரிசை சட்ட விதிகளால், இந்த வசதி புதிய ஹூண்டாய் வெர்னா காரில் இடம்பெறாது என்று தெரிகிறது.
புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!
புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








