இந்திய சாலைகளில் முக்காடு போட்டு சுற்றி வரும் புதிய ஹூண்டா சான்ட்ரோ கார்..!!
இந்திய சாலைகளில் முக்காடு போட்டு சுற்றி வரும் புதிய ஹூண்டா சான்ட்ரோ கார்..!!
2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகவுள்ள புதிய சான்ட்ரோ ஹேட்ச்பேக் கார் தற்போது இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

மாருதி சுஸுகியின் ஆல்டோ மற்றும் ரெனால்ட் க்விட் கார்களுக்கு போட்டியாக ஹூண்டாய் விரைவில் மேம்படுத்தப்பட்ட சான்ட்ரோ காரை அறிமுகம் செய்கிறது.

ஹூண்டாய் நிறுவனத்திற்கு இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்று தந்த மாடல் சான்ட்ரோ ஹேட்ச்பேக் கார்.
இதன் விற்பனை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால், புதிய சான்ட்ரோ காரை ஹூண்டாய் வெளியிடுகிறது.

ஹேட்ச்பேக் சந்தையை குறிவைத்து ஹூண்டாய் முன்னதாக இயான் கார் மாடலை வெளியிட்டது. ஆனால், அது பெரியளவில் வரவேற்பு பெறவில்லை.

2018 ஆட்டோ எக்ஸ்போ அல்லது டெல்லி மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் புதிய சான்ட்ரோ கார் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த கார் முழுமையாக மூடப்பட்டு இருந்ததால் அதன் தோற்றத்தை குறித்து அதிகப்படியான தகவல் கிடைக்கப்பெறவில்லை.

இருந்தாலும் தற்போது பயன்பாட்டில் உள்ள சான்ட்ரோ கார்களை போல இந்த புதிய மாடலும் டால்பாய் வடிவமைப்பை கொண்டு இருக்கும் என்று தெரிகிறது.

மேலும், புதிய சான்ட்ரோ காரில் பெரிய கிளாஸ் பேனல்கள், பின்புற ஜன்னல் மற்று சி பில்லர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய தலைமுறைக்கான சான்ட்ரோ காரின் இந்த வடிவமைப்பு நுணுக்கங்களை வைத்து பார்க்கும் போது அது ஹூண்டாய் ஐ10 போன்றிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

அலாய் வீல்களுக்கு பதிலாக புதிய சான்ட்ரோ காரில் ஸ்டீல் ரிம்களை பெற்ற வீல் கேப்கள் உள்ளதால், இந்த மாடலின் விலை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சான்ட்ரோ காரில் 800சிசி 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இருக்கலாம் என எண்ணப்படுகிறது. மேலும் இந்த கார் ஏஎம்டி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவைகளில் வெளிவரலாம்.

அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வெளிவரலாம் என்று எதிர்பாக்கப்படும் புதிய சான்ட்ரோ கார் ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம்.

ஹூண்டாய்க்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கி தந்த இந்த காரில் பல புதிய மற்றும் அதிகப்படியாக அம்சங்கள் இடம்பெற வாய்பிருக்கலாம்.

இந்தியாவில் ஹேட்ச்பேக் மாடல்களுக்கான சந்தை பெரியளவில் உள்ளது. குறிப்பாக மாருதி சுஸுகியின் ஆல்டோ, ரெனால்ட் க்விட் மற்றும் டட்சன் ரெடிகோ மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

தற்போது இந்த ஹேட்ச்பேக் மாடல்களுக்கு போட்டியாக ஹூண்டாயின் புதிய சான்ட்ரோ களமிறங்க இருப்பது இந்திய வாகன சந்தையில் சூட்டை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications