மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி க்யூ3 கார் விற்பனைக்கு அறிமுகம்
மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஆடி க்யூ3 கார் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
ஆடி நிறுவனத்திற்கு இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் மாடலாக க்யூ3 கிராஸ் ஓவர் எஸ்யூவி கார் விளங்குகிறது. தற்போது மேம்படுத்தப்பட்ட புதிய 2017 'க்யூ3' காரை அறிமுகப்படுத்தியுள்ளது ஆடி நிறுவனம். வெளிப்புறம், உட்புறம் மற்றும் இயந்திரவியல் மாறுதல்களுடன் க்யூ3 கார் புதிதாக மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் சொகுசு கார் விற்பனையில் முன்னணியில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க இந்த ஆண்டில் சில அதிரடி அறிமுகங்களை ஆடி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதத்தில் புதிய ‘ஏ3 காப்ரியோலட்' மற்றும் புதிய ‘ஏ4 டீசல்' கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது ஆடி நிறுவனம். இந்த வரிசையில் தற்போது புதிய ‘2017 க்யூ3' கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆடி க்யூ3 யில் 2.0 லிட்டர் டிடிஐ இஞ்சின் உள்ளது. இதன் இரு வேரியண்டுகளில், இருவகையான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இருவகையாக ட்யூன் செய்யப்பட்டுள்ளது. ஆடி க்யூ3யில் ஃபிரண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இரு வேரியண்டுகள் உள்ளன.

புதிய க்யூ3 காரின் ஃபிரண்ட் வீல் டிரைவ் மாடல் அதிகபட்சமாக 147 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இதே போல இதன் ஆல் வீல் டிரைவ் மாடல் அதிகபட்சமாக 182 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இரண்டு மாடலிலும் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

இதன் தோற்றத்தில் சில புதிய வகை மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட முகப்பு பம்பர்கள், ஷார்பர் லைன், பனோரமிக் சன் ரூஃப், 17 இஞ்ச் அலாய் வீல்கள், எல்ஈடி விளக்குகளுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள் என பல புதுமைகளை தோற்றத்தில் கொண்டு உருமாறியுள்ளது க்யூ3 கார்.

புதிய க்யூ3 காரின் சீட்கள் லெதர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, முன்புறத்தில் எலக்ட்ரிகல் அட்ஜஸ்மெண்ட் சீட்கள், கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. பிரண்ட் வீல் டிரைவ் மாடலுக்கு பிரவுன் கலரிலும், ஆல் வீல் டிரைவ் மாடலுக்கு அலுமினியம் டேன்ஜெண்ட் கலரிலும், கலர் டோன் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ரஹில் அன்சாரி கூறுகையில், "எங்கள் நிறுவன கார்களிலேயே சிறந்த விற்பனை ஆகும் மாடலாகவும் இந்த செக்மெண்ட்டில் சிறந்ததாகவும் க்யூ3 கார்கள் விளங்குகின்றன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ற வகையில் இதனை தற்போது மெருகேற்றியுள்ளோம்" என்றார்.

புதிய ஆடி க்யூ3 ஆல் வீல் டிரைவ் மாடல் ரூ.37.20 லட்சம் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையிலும், பிரண்ட் வீல் டிரைவ் மாடல் ரூ.34.20 லட்சம் ( டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையிலும் கிடைக்கிறது.

க்யூ3 கார்கள் முதல் முறையாக கடந்த 2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுதப்பட்டன, தற்போது மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகமாகியுள்ளது. இவை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார்களுக்கு போட்டியாக விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய 2017 ஆடி எஸ்க்யூ5 காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்:


Click it and Unblock the Notifications








