எமது கேமராவில் சிக்கிய செவர்லே பீட் எசென்சியா செடான் கார்- ஸ்பை படங்கள்!
செவர்லே எசென்சியா காரின் பிரத்யேக ஸ்பை படங்களையும், தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் செடான் கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பது தெரிந்ததே. வரிச்சலுகை பெற முடிவதால், ஹேட்ச்பேக் கார்களைவிட சற்றே கூடுதல் விலையில் இந்த செடான் கார்கள் கிடைப்பதால், வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதனால், இந்த மார்க்கெட்டில் இப்போது ஏராளமான மாடல்கள் வந்து நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு டெல்லி சர்வதேச வாகன கண்காட்சியில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது செவர்லே பிராண்டில் புதிய காம்பேக்ட் செடான் கார் மாடலை காட்சிக்கு வைத்தது. செவர்லே பீட் ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான செடான் கார் மாடலாக மாற்றம் செய்யப்பட்ட இந்த மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியது.

செவர்லே எசென்சியா என்ற பெயரிலான இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் தற்போது தீவிரமான சாலை சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகே நெடுஞ்சாலை ஒன்றில் அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட செவர்லே எசென்சியா காரை எமது மும்பை நிருபர் படமெடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்டு இருந்த செவர்லே எசென்சியா கார் தயாரிப்பு நிலை மாடலுக்குரிய அம்சங்களை பெற்றிருந்தது. எனவே, இந்த காரிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை.

செவர்லே பீட் காருக்கும், எசென்சியா காருக்கும் முகப்பு க்ரில் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அத்துடன், பின்புறத்தில் பூட் ரூம் சேர்க்கப்பட்டு செடான் வகை மாடலாக மாற்றப்பட்டு இருக்கிறது.

செவர்லே பீட் காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள்தான் புதிய எசென்சியா காரிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் இந்த புதிய செவர்லே எசென்சியா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.
புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!
புதிய ஹோண்டா சிட்டி காரின் பிரத்யேக படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








