டிரைவரில்லாமல் இயங்கும் கூகுள், உபர் கார்கள் விரைவில் இந்தியா வர வாய்ப்பு?
டிரைவரில்லாமல் இயங்கும் கூகுள், உபர் கார்கள் விரைவில் இந்தியா வர வாய்ப்பு எழுந்துள்ளது.
டிராஃபிக் ஜாமில் கார் ஓட்டி நொந்து நூடூல்ஸானவர்கள், தானாக இயங்கும் கார் இருந்தால் ஹாயாக ஆபிஸ் செல்லலாம் என்று அங்கலாய்ப்பது இயல்பு. அதுபோன்ற கார்களை உருவாக்க உலகின் பல முன்னணி கார் நிறுவனங்களும், தொழில்நுட்ப ஜாம்பாவான்களும் போட்டா போட்டியில் இறங்கி உள்ளன.

அப்படி உருவாக்கப்பட்டாலும், அதுபோன்ற கார்கள் இப்போதைக்கு நம் நாட்டுக்கு வருவது சாத்தியமில்லை; அதெல்லாம் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கான சமாச்சாரம், நம் நாட்டு சட்ட திட்டங்களும், போக்குவரத்து கட்டமைப்புகளும் உள்ளன. அதெல்லாம் நம்ம ஊருக்கு சரிபட்டு வருமா? என்று அலுப்பான பதில்தான் கூற முடிகிறது.

ஆனால், இந்த கூற்றை உடைக்கும் விதத்தில், கூகுள், உபர் உள்ளிட்ட தானியங்கி கார்கள் விரைவில் இந்தியா வரும் வாய்ப்பு எழுந்துள்ளது. ஆம், விரைவில் அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய சாலை போக்குவரத்து விதிகளின்படி, இதுபோன்ற டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை சோதனை ஓட்டம் நடத்துவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன.

2016ம் ஆண்டு புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி. வாகன துறையில் புதுமையான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் விதத்தில் பல புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, டிரைவரில்லாமல் இயங்கும் வாகனங்களை சோதனை ஓட்டம் நடத்துவதை அனுமதிக்க வகை செய்யும் விதிகள் வகுக்கப்பட்டு இருப்பதாக, பெயர் வெளியிட விரும்பாத மத்திய அமைச்சக அதிகாரி ஒருவர் எக்கானமிக் டைம்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது புதிய மோட்டார் வாகன சட்ட மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார் வாகன சட்டத்தை பாராளுமன்ற நிலைக்குழு தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கு அனுமதி பெற முடியும். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் அனுமதி பெற்று டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை சோதனை ஓட்டம் நடத்த முடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கூகுள், உபர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கார்களை விரைவில் இந்தியாவில் சோதனை நடத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருப்பதாகவும் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் டாடா எல்க்ஸி நிறுவம் பெங்களூரில் தனது கார்களை சோதனை நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தது.

டிரைவரில்லாமல் இயங்கும் கார் மட்டுமின்றி, டிரைவரில்லாமல் இயங்கும் வர்த்தக வாகனங்கள் கூட சோதனை ஓட்டம் நடத்துவதற்கு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டு இருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனால், டிரைவரில்லாமல் இயங்கும் வாகனங்கள் விரைவில் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்தவுடன் பல முக்கிய மாற்றங்கள் சாலை போக்குவரத்தில் நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!
புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








