ஜிஎஸ்டி எதிரொலி: இசுசூ கார் மாடல்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை அதிரடி விலை குறைப்பு..!
ஜி.எஸ்.டி எதிரொலியாக இசுசூ நிறுவன வாகன மாடல்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக காணலாம்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் எதிரொலியாக தனது கார் மாடல்கள் மற்றும் பிக் அப் டிரக்குகளின் விலையை 60,000 ரூபாய் முதல் 1.5 லட்ச ரூபாய் வரை அதிரடியாக குறைத்துள்ளது இசுசூ நிறுவனம்.

ஜி.எஸ்.டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

அமலாக இருக்கும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் ஆட்டோமொபைல் துறையில் வரி விதிப்பு பெருமளவில் குறையும் நிலை உருவாகியுள்ளது.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமலாவதால் குறிப்பாக எஸ்யூவி மற்றும் பிரிமியம் கார் செக்மெண்டில் 12% அளவிற்கு விலை குறையும் நிலை உருவாகியுள்ளது

இதனை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை குறைப்பின் பலனை அளிக்கும் வகையில் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்/பைக் மாடல்களின் விலையில் அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றது.

மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் அதன் சொகுசு கார்கள் மீதான விலை குறைப்பை ஏற்கெனவே நடைமுறைபடுத்தி விட்டது. இதைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் அதன் ஈகோ ஸ்போர்ட், ஆஸ்பயர் மற்றும் ஃபிகோ மாடல்கள் விலையில் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை குறைத்தது.

தற்போது ஜப்பானிய நிறுவனமான இசுசூவும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் அடையும் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

சரக்கு (கமர்சியல்) வாகனங்கள் தயாரிப்பிலும் இதர ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இஞ்சின் தயாரித்து வழங்குவதிலும் கொடிகட்டிப் பறக்கும் ‘இசுசூ' ஜப்பானைச் சேர்ந்த ஒரு பிரபல நிறுவனமாகும்.

இந்நிறுவம் தனது வாகன உற்பத்தி தொழிற்சாலையினை சென்னை அருகேயுள்ள ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இசுசூ நிறுவனம் இந்த மே மாதத்தின் துவக்கத்தில் எம்யூ-எக்ஸ் என்ற எஸ்யூவியினை அறிமுகம் செய்தது. இந்த கார் ஃபோர்டு எண்டேவர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களுக்கு போட்டியாகும். தற்போது இந்த மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் சலுகை அறிவித்துள்ளது.

இதன்படி ரூ.23.9 லட்சம் முதல் ரூ. 25.9 லட்சம் வரையிலான விலையில் அறிமுகமான இசுசூ எம்யூ-எக்ஸ் எஸ்யூவியின் விலை ரூ.22.4 லட்சம் முதல் ரூ.24.4 லட்சம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இசுசூ எம்யூ-எக்ஸ் எஸ்யூவி காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டர்போ இன்லைன் டீசல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 174 பிஹச்பி ஆற்றலையும், 380 என்எம் டார்க்கையும் வழங்கவல்லதாகும். இதில் 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ளது.

இதே போல இந்நிறுவனத்தின் மற்றொரு மாடலான வி-கிராஸ் அட்வெஞ்சர் யுடிலிட்டி வெஹிகிள் ரகத்திலானது. இதன் விலையில் ரூ.60,000 சலுகை அறிவித்துள்ளது இசுசூ நிறுவனம். தற்போது இசுசு வி-கிராஸ் பிக் அப் டிரக்கின் புதிய விலை ரூ.12.7 லட்சம் ஆகும்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் மூலம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அடையும் பலன்களை தொடர்ந்து காணலாம்..

- இஞ்சின் மற்றும் வாகனத்தின் நீளத்தை பொறுத்து 1% முதல் 15% வரை வரி குறையும்.
- 4 மீட்டருக்கும் குறைவான நீளம் மற்றும் 1200சிசிக்கு குறைவான இஞ்சின் திறன் கொண்ட பெட்ரோல் கார்களுக்கு 3% வரி குறைகிறது.
- 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் மற்றும் 1,500சிசிக்கு அதிகமான இஞ்சின் திறன் கொண்ட வாகனங்களுக்கு 15% வரி குறைகிறது.


Click it and Unblock the Notifications








