ரூ.10 லட்சத்தில் புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப் நிறுவனம்!
ரூ.10 லட்சத்தில் புதிய எஸ்யூவி மாடலை ஜீப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் விரைவில் காம்பஸ் என்ற புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க உள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது.

மேலும், அதிகபட்சமான பாகங்கள் இந்திய சப்ளையர்களிடமிருந்தே பெறப்பட்டு உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதனால், இந்த எஸ்யூவி மிக சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அசத்தலான டிசைன் மற்றும் இதர அம்சங்கள் இந்த எஸ்யூவிக்கு பெரிய வரவேற்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்த எஸ்யூவி மீதான ஆவலை மேலும் அதிகரித்து இருக்கிறது. ஜீப் காம்பஸ் ஒரு ஆரம்பம்தான். இனிதான் ஆட்டமே இருக்கிறது என்பதுபோல், அடுத்து ஒரு புதிய மாடலுடன் திட்டத்தை வகுத்துள்ளது ஜீப் நிறுவனம்.

ஆம். ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் மற்றொரு புதிய எஸ்யூவி மாடலையும் ஜீப் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக எக்கானிக் டைம்ஸ் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது. தனது ரெனிகேட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஜீப் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற எஸ்யூவி மாடல்களுடன் இந்த புதிய ஜீப் ரெனிகேட் போட்டி போடும். ஜீப் நிறுவனத்திற்கு உரிய பாரம்பரிய தோற்றம், நவீன வசதிகளுடன் இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவரும்.

ஜீப் காம்பஸ் மற்றும் ரெனிகேட் ஆகிய இரண்டு மாடல்களுடன் ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருப்பதால், ரெனிகேட் எஸ்யூவியை இந்தியாவில் உற்பத்தி செய்வதில் பல சாதகங்கள் உள்ளன. அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டி இருக்காது.

இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் மிக குறைவான விலை எஸ்யூவி மாடலாக இது நிலை நிறுத்தப்படும். ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் ஜீப் ரெனிகேட் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சியில் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று தெரிகிறது.

ஜீப் செரோக்கி மற்றும் ரேங்லர் மாடல்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுவதால், எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், ஜீப் காம்பஸ் மூலமாக இந்திய மார்க்கெட்டில் சிறப்பான அடித்தளத்தையும், அதற்கடுத்து, ரெனிகேட் மூலமாக வலுவான சந்தையை ஏற்படுத்திக் கொள்ள ஜீப் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

இதனிடையே, ஃபியட் க்றைஸ்லர் குழுமம் இந்தியாவில் ஃபியட் கார்களின் விற்பனையை நிறுத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாக யூகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மார்க்கெட்டில் ஜீப் பிராண்டு தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








