என்ன ஆச்சர்யம்... அடுத்த மாதமே இந்தியா வருகிறது புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி!
புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் இந்திய அறிமுக தேதி விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரங்களை காணலாம்.
உலகின் அதிவேக எஸ்யூவி மாடலாக குறிப்பிடப்படும் புதிய லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த 4ந் தேதி இத்தாலியில் நடந்த விழாவில் லம்போர்கினி நிறுவனத்தின் உரஸ் சூப்பர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜனவரி 11ந் தேதி இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

அதாவது, உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டு வெறும் 38 நாட்களில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிக வர்த்தக வாய்ப்பு இருக்கும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு முன்னதாகவே இந்தியாவில் இந்த புதிய எஸ்யூவியை களமிறக்க உள்ளது.

இந்திய மார்க்கெட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த முடிவை லம்போர்கினி நிறுவனம் எடுத்துள்ளது தெரிகிறது. மேலும், உலக அளவில் அதிக டிமான்ட் இருக்கும் என்று கருதி, உரஸ் எஸ்யூவி உற்பத்திக்காக தனி தொழிற்சாலையை லம்போர்கினி நிறுவி இருக்கிறது.

மேலும், தற்போது ஆண்டுக்கு 3,500 சூப்பர் கார்களை விற்பனை செய்து வரும் லம்போர்கினி நிறுவனம், உரஸ் எஸ்யூவி வருகைக்கு பின்னர் ஆண்டுக்கு 7,000 கார்கள் வரை விற்பனை செய்வதற்கு இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது.

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் இந்தியாவிற்கு புதிய உரஸ் எஸ்யூவிகளை லம்போர்கினி நிறுவனம் ஒதுக்கீடு செய்யும். அதன்பின்னர், முழுமையான அளவில் டெலிவிரி கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
Recommended Video


வழக்கம்போல் லம்போர்கினி நிறுவனத்தின் சூப்பர் கார்களுக்கு உண்டான மிடுக்கும், மிரட்டலும் இந்த புதிய உரஸ் எஸ்யூவியிலும் காண கிடைக்கிறது.

உலகின் அதிவேகமான இந்த எஸ்யூவி மாடலில் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 641 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக 4 சக்கரங்களுக்கும் எஞ்சின் பவர் கடத்தப்படுகிறது.

இந்த சூப்பர் எஸ்யூவியானது 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 306 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது. இந்த எஸ்யூவியில் 6 டிரைவிங் மோடுகள் இருக்கின்றன. ஆஃப்ரோடு சாகசங்களுக்காக பிரத்யேக டிரைவிங் மோடுகளும் உள்ளன.

ரூ.3.5 கோடி விலையில் இந்த புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி செய்து விற்பனைக்கு வருவதால், இறக்குமதி வரி சேரும்போது விலை ரூ.5 கோடியை தாண்டும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








