10,000 எலக்ட்ரிக் கார்களுக்கு டென்டர்... மஹிந்திராவுக்கு சுக்கிர திசை ஆரம்பம்!
10,000 எலக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு மத்திய அரசு டென்டர் வெளியிட்டு இருக்கிறது. இந்த டென்டரை மஹிந்திரா கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10,000 எலக்ட்ரிக் கார்களை சப்ளை செய்வதற்கான பல்க் ஆர்டரை பெறும் வாய்ப்பை மஹிந்திராவுக்கு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

வரும் 2030ம் ஆண்டிற்குள் மின்சார கார்களை முழு அளவில் பயன்பாட்டில் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபடியாக, மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக மின்சார கார்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, மத்திய ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் EESL அமைப்பு டென்டர் ஒன்றை வெளியிட்டது. இந்த டென்டர் படி, 10,000 மின்சார கார்கள் மற்றும் 3,000 ஏசி சார்ஜர்களையும், 1,000 டிசி சார்ஜர்களையும் வாங்குவதற்கான டென்டர் விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நம் நாட்டில் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனமாக மஹிந்திரா இருக்கிறது. எனவே, இந்த 10,000 கார்களை சப்ளை செய்வதற்கான பல்க் ஆர்டர் மஹிந்திராவுக்கே கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

தற்போது மஹிந்திரா நிறுவனம் இ2ஓ என்ற மின்சார கார் மாடலை உற்பத்தி செய்து விற்று வருகிறது. மேலும், பேட்டரியில் இயங்கும் வெரிட்டோ காரும் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், பேட்டரியில் இயங்கும் வெரிட்டோ கார்களை மத்திய அரசுக்கு மஹிந்திரா சப்ளை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இதுதவிர, தனது கீழ் செயல்பட்டு வரும் உலக புகழ்பெற்ற கார் வடிவமைப்பு நிறுவனமான இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனத்துடன் இணைந்து புதிய மின்சார கார் மாடலையும் உருவாக்கி வருகிறது. மேலும், இரண்டு புதிய திறன் வாய்ந்த பேட்டரிகளையும் மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி வருகிறது.
Recommended Video


இந்த நிலையில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 350 கிமீ தூரம் வரை பயணிக்கும் புதிய மின்சார கார் மாடல்களை அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மஹிந்திரா அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, ரூ.600 கோடி வரை மஹிந்திரா முதலீடு செய்துள்ளது.

இந்த நிலையில்,அரசு வெளியிட்டிருக்கும் டென்டரை மஹிந்திரா கைப்பற்றும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் பிரிவு வர்த்தக ரீதியில் மிகப்பெரிய பலத்தை பெறும். மேலும், மின்சார கார் உற்பத்தி ஆலையையும் விரிவாக்கம் செய்யவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 60,000 கார்கள் வரை உற்பத்தி செய்யும் வகையில் தனது உற்பத்தி மையத்தை விரிவாக்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








