மஹிந்திரா எஸ்யூவி உரிமையாளர்களுக்கு சவால் கொடுத்த கிரேட் எஸ்கேப்!
கர்நாடக மாநிலம், சக்லேஷ்பூரில் நடந்த மஹிந்திரா கிரேட் எஸ்கேப் ஆஃப்ரோடு சாகச போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கர்நாடக மாநிலம், சக்லேஷ்பூரில் நடந்த மஹிந்திரா நிறுவனத்தின் 142வது கிரேட் எஸ்கேப் ஆஃப்ரோடு சாகச போட்டி நடந்தது. மஹிந்திரா எஸ்யூவிகளின் திறனை, அதன் உரிமையாளர்கள் நேரடியாக உணர்ந்து கொள்ளும் விதத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது. கடும் சவால்களுடன் நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

சக்லேஷ்பூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மஹிந்திரா எஸ்யூவி உரிமையாளர்களும், பெங்களூர் உள்ளிட்ட அருகிலுள்ள நகரங்களை சேர்ந்த மஹிந்திரா எஸ்யூவி உரிமையாளர்களும் இந்த போட்டியில் பங்கு கொண்டனர். மொத்தம் 100க்கும் மேற்பட்ட மஹிந்திரா எஸ்யூவிகள் இந்த போட்டியில் களமிறங்கின.

சக்லேஷ்பூரில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும், டீ எஸ்டேட்டுகளின் ஊடாக இந்த ஆஃப்ரோடு போட்டி நடத்தப்பட்டது. தவிரவும், கனமழையும் போட்டியாளர்களுக்கும், மஹிந்திரா எஸ்யூவிகளுக்கும் கடும் சவாலை கொடுத்தது. வழுக்குத் தரை, செங்குத்தான மலைச் சாலைகள், அடர்ந்த வனப் பகுதி சாலைகள் வழியாக இந்த போட்டி நடத்தப்பட்டது.

சக்லேஷ்பூரில் உள்ள கடமனே எஸ்டேட்டில் இந்த போட்டி துவங்கி வைக்கப்பட்டது. மஹிந்திரா தார், ஸ்கார்ப்பியோ, பொலிரோ எஸ்யூவி மாடல்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனத்துடன் இந்த போட்டியில் பங்கு கொண்டனர்.
Recommended Video


மிக மோசமான சாலைகள், நீர் நிலைகள், மனித தடம் பதிக்காத சாலைகள் வழியாக நடந்த இந்த போட்டி மஹிந்திரா உரிமையாளர்களுக்கு புதிய அனுபவத்தையும், பரவசத்தையும் ஏற்படுத்தியது. மேலும், மஹிந்திரா எஸ்யூவிகளின் கட்டுமானத் தரம், செயல்திறன் போன்றவற்றையும் நேரடியாக வாடிக்கையாளர்கள் உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது.

இந்த போட்டிக்கான வழித்தடத்தில் இயற்கையான தடைகள் தவிர்த்து, போட்டியாளர்களின் ஓட்டுதல் திறனை சோதிக்கும் விதத்தில், மஹிந்திரா அட்வென்ச்சர் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த மூன்று விதமான தடைகளையும் கடக்க வேண்டி இருந்தது.

இந்த போட்டியில் ஸ்டாக் வாகன பிரிவில் ஜே.ஜோஸ் முதலிடத்தை பிடித்தார். ககன் கரும்பையா இரண்டாவது இடத்தை பிடித்தார். மாடிஃபைடு வாகன பிரிவில் அஜீத் குமார் முதலிடத்தையும், சஹத் மற்றும் நன்னையா இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். மகளிர் பிரிவில் சப்னா குர்கர் முதலிடத்தை பிடித்தார்.

லோனாவாலா, கோவா, டேராடூன், வயநாடு, சண்டிகர், போபால் மற்றும் ஷில்லாங் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கும் மஹிந்திரா கிரேட் எஸ்கேப் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெறுவர்களுடன் சக்லேஷ்பூரில் வெற்றி பெற்றவர்கள் இறுதிப் போட்டியில் மோதுவர். இறுதிப் போட்டி மஹாராஷ்டிர மாநிலம், இகத்புரியில் நடைபற இருக்கிறது.


Click it and Unblock the Notifications








