முக்காடு இல்லாமல் தரிசனம் கொடுத்த புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி!
மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. அதனை இந்த செய்தியில் காணலாம்.
முதல்முறையாக மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரை முழுமையாக காண்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. 7 சீட்டர் மாடலாக வரும் இந்த காரின் அட்டகாசமான ஸ்பை படங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவி தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அடையாளங்கள் மறைக்கப்படாத நிலையில், இந்த எஸ்யூவியை முழுமையாக காண்பதற்கான வாய்ப்பு இப்போது கிட்டியிருக்கிறது. ஆம், இந்த எஸ்யூவியின் ஸ்பை படங்கள் தற்போது ஆட்டோகார் இந்தியா தளம் வாயிலாக வெளியாகி உள்ளன.

இந்த ஸ்பை படங்களின் மூலமாக, மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியானது தயாரிப்புக்கு ஏற்ற மாடலாக உருபெற்றிருப்பது தெரிய வருகிறது. முன்புற டிசைனில் டியூவி300 எஸ்யூவியை ஒத்திருக்கிறது.

பக்கவாட்டில் நீளம் அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன், டெயில் லைட் க்ளஸ்ட்டர் பக்கவாட்டில் நீண்டிருக்கிறது. அத்துடன், வடிவமைப்பிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பின்புற கதவில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டு இருப்பதுடன், டெயில் லைட் க்ளஸ்ட்டர் டிசைனும் புதிது.

டியூவி300 எஸ்யூவியைவிட டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியின் நீளம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால், மூன்று வரிசை இருக்கைகளிலும் தாராளமான இடவசதி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Recommended Video


இந்த புதிய எஸ்யூவியில் 1.99 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 119 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனையாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் இதே டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்படுகிறது.

டியூவி300 எஸ்யூவியைவிட இந்த புதிய மாடலில் கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பின்புற இருக்கைகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் போன்றவையும் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியானது மஹிந்திரா ஸைலோவுக்கு மாற்றாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, யு321 என்ற குறியீட்டுப் பெயரிலான புதிய எம்பிவி காரையும் மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கிறது. 7 சீட்டர் மாடலாக வரும் இந்த புதிய மஹிந்திரா கார் பிரிமியம் வசதிகளுடன் வருவதால், இது டொயோட்டா இன்னோவா காருக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








