புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் உற்பத்தி டிசம்பரில் துவங்குகிறது!
வரும் டிசம்பர் முதல் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் உற்பத்தி வரும் டிசம்பர் மாதத்தில் துவங்க இருப்பதாக எக்கனாமிக்ஸ் டைம்ஸ் ஆட்டோமொபைல் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் அறிமுகம் இந்தியாவில் தாமதம் செய்யப்பட்டு வருகிறது. இது புதிய ஸ்விஃப்ட் கார் வாங்க காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

அடுத்த ஆண்டு பிற்பாதியில்தான் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், வரும் டிசம்பர் 1ந் தேதி புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் சுஸுகி நிறுவனத்தின் புதிய கார் ஆலையில்தான் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இந்த ஆலையில் தற்போது மாருதி பலேனோ கார் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

புதிய தலைமுறை மாருதி டிசையர் காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது போன்றே, புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காருக்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அதிக அளவில் முன்பதிவு கிடைக்கும் என்பதால், குஜராத் ஆலையில் அதிக அளவில் புதிய ஸ்விஃப்ட் காரை உற்பத்தி செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, காத்திருப்பு காலம் பெரிய அளவு நீடிக்காமல் தவிர்க்க முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் டிசைனில் பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. குறிப்பாக, பானட், முன்பக்க க்ரில் அமைப்பு ஆகியவை மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. ஹூண்டாய் எலைட் ஐ20 கார் போன்றே, சி பில்லரில் கூரையையும், பில்லரையும் பிளவு படுத்தும் கருப்பு வண்ண அலங்காரத்துடன் வருகிறது.

உட்புறத்தில் சில டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. தொடுதிரை அமைப்புடன் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தட்டையான அடிப்பாகத்துடன் ஸ்டீயரிங் வீல் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

தற்போதைய மாடலில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள்தான் புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட உள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்களில் வருகிறது.

வரும் டிசம்பர் 1 முதல் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட இருப்பதால், அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








