இந்த 6 விதிமீறல்களில் ஈடுபட்டால் மட்டுமே ஒரிஜினல் லைசென்ஸ் கேட்பார்களாம்!
6 விதிமீறல்களில் ஈடுபடுவோரிடம் மட்டுமே ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கேட்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் துறை சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் எடுத்துச் செல்லும் புதிய விதிமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், குறிப்பிட்ட 6 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என்று சென்னை பெருநகர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அனைத்து வாகன ஓட்டிகளும் கையில் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கையில் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதையடுத்து, நாளை முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வர இருக்கிறது. இதனால், ஒரிஜினல் லைசென்ஸை தொலைத்து நகலை வைத்து வண்டி ஓட்டுபவர்கள், பணியாற்றும் நிறுவனங்களில் ஒரிஜினல் லைசென்சை ஒப்படைத்திருப்போர் கடும் சிக்கலில் உள்ளனர்.
Recommended Video


இந்த நிலையில், இந்த விதிமுறை குறித்து சென்னை பெருநகர காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்," மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுனர், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுவோர், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகள், சிக்னல் ஜம்ப், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 விதிமுறைகளை மீறுவோரிடம் மட்டுமே அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும்.

வழக்கமான வாகனச் சோதனையின்போது விதிமீறுவோரிடம் மட்டுமே ஒரிஜினல் லைசென்ஸ் கேட்கப்படும் என்று அவர் கூறி இருக்கிறார். எனவே, போக்குவரத்து விதிகளை மீறாமல் செல்வோர் சற்றே நிம்மதியான தகவலாக இருக்கும். எனினும், சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு காவல் துறை அதிகாரிகள் அல்லது போக்குவரத்து அதிகாரிகள் அசல் சான்றிதழை கேட்கும்போது கொடுக்க வேண்டியது கட்டாயமாக இருக்கும்.

போக்குவரத்து விதிகளை மீறுவோரின் அசல் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு, மோட்டார் வாகனச் சட்டப்படி, வட்டார போக்குவரத்து அலுவலர் மூலமாக குறைந்தது 3 மாதங்கள் தற்காலிகமாக ரத்து செய்து வைக்கப்படும்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் மேற்கண்ட 6 போக்குவரத்து மீறல்களிலும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்பொருட்டே இவ்வாறு ஒரிஜினல் லைசென்ஸ் கேட்கவும், அதனை பறிமுதல் செய்து தற்காலிக ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Via- Dinamani


Click it and Unblock the Notifications








