ரோல்ஸ்ராய்ஸ் எஸ்ஆர்ஹச் - சிறுவர்களுக்கான குட்டி எலக்ட்ரிக் கார்!
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் சிறுவர்களுக்கான கார் ஒன்றினை பிரத்யேகமாக தயாரித்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
ஆடம்பர கார்கள் என்றாலே நம் நினைவுக்கு சட்டென வருவது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தான். இக்கார்களின் ஆரம்ப விலையே கோடிகளில் இருந்து தான் தொடங்கும். பணக்காரர்களுக்கே கணவு வாகனமாக இவை விளங்குகின்றன என்றால் மிகையல்ல. தற்போது சிறுவர்களுக்காக ஒரு குட்டி காரை ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் அது விற்பனைக்காக அல்ல.

சார்லஸ் ஸ்டீவர்ட் ரோல்ஸ் மற்றும் பிரட்ரிக் ஹென்ரி ராய்ஸ் என்ற இருவரால் 1904ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டதே ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம். இந்நிலையில் இந்நிறுவனம் அமைந்துள்ள இங்கிலாந்தின் மேற்கு-சஸ்செக்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்காக இவர்கள் பிரத்யேகமாக குட்டி ரோல்ஸ்ராய்ஸ் காரை வடிவமைத்துள்ளனர்.

அங்குள்ள தூய ரிச்சர்டு மருத்துவமனையின் (St Richard's Hospital)
குழந்தைகள் மருத்துவப்பிரிவில் உள்ள குழந்தைகளுக்காகவே இந்த பிரத்யேக குட்டி கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்காருக்கு St Richard's Hospital என்ற பெயரின் சுருக்கமாக ‘ரோல்ஸ்ராய்ஸ் எஸ்ஆர்ஹச்' என பெயரிடப்பட்டுள்ளது. அங்குள்ள குழந்தைகள் மருத்துவப் பிரிவில் உள்ள குழந்தைகள் அறுவை சிகிச்சை போன்ற உயர் சிகிச்சையை பெறுவதற்கு முன் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க உதவும் என்ற உயரிய எண்ணத்தில் இந்த காரை அளித்துள்ளனர் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தினர்.

ரெகுலர் ரோல்ஸ்ராய்ஸ் காரின் மினியேச்சராக உள்ள இந்த குட்டி கார் ஒரு சீட் கொண்ட எலக்ட்ரானிக் காராகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 16 கிமீ ஆகும். இதன் வேகத்தை மணிக்கு 6 கிமீ என குறைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் சிறந்த குழுவான Bespoke Manufacturing team இக்காரை 400 மணி நேரம் செலவிட்டு உருவாக்கியுள்ளனர். இதற்கு இருவண்ண கலவையிலான பெயிண்டிங் தரப்பட்டுள்ளது. St Richard's Hospitalக்காக தயாரிக்கப்பட்டது என்ற சிறப்பு குறியீடும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் அந்த மருத்துவமனையின் வராண்டாக்களில் இக்குட்டி காரை குழந்தைகள் ஓட்ட விஷேஷமான ஏற்பாட்டையும் செய்துள்ளனர். அங்கு சாலைகளில் உள்ள போக்குவரத்து குறியீடுகளையும் நிறுவியுள்ளனர். அது நிஜ சாலையில் கார் ஓட்டும் அனுபவத்தை குழந்தைகளுக்கு அளிக்கிறது.

குழந்தைகளுக்கானது என்பதால் இதனை ஏனோதானோ என ரோல்ஸ்ராய்ஸ் தயாரித்துவிடவில்லை. ரெகுலர் கார்களில் இருக்கும் லெதர் சீட், ஸ்டீரிங் வீல், முகப்பு என அனைத்து சொகுசு அம்சங்களையும் இதில் சேர்த்துள்ளனர். இதன் மொத்த நீளம் 70 செமீ ஆகும்.

ஒவ்வொரு புதிய மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கார் வெளியிடப்படும் போதும் அதனை அந்நிறுவன தலைவர் முன்பாக ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உள்ள லேனில் ஒருவர் இயக்கி காண்பிப்பார். இது நீண்ட காலமாக அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கம்.
இக்குட்டி காரை மருத்துவமனையிலிருந்து வந்த இரண்டு சிறுவர்கள் மூலம் ஓட்டவைத்து அந்த வழக்கத்தை தொடரச் செய்தனர்.

இது குறித்து, மருத்துவமனையின் தலைமை நிர்வாகி மரியன் கிரிஃப்த்ஸ் கூறுகையில், குழந்தைகளின் நலனுக்காக தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டுள்ள ரோல்ஸ்ராய்ஸ் நிர்வாகத்தினருக்கும் இதை உருவாக்கிய பொறியாளர்களுக்கு இதயம் கணிந்த நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளதாக கூறினார்.
ரோல்ஸ்ராய்ஸ் வ்ராய்த் காரின் படங்கள்:


Click it and Unblock the Notifications








