உலகில் அதிகம் விரும்பப்படும் கார் நிறம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!
கார் வாங்குபவர்களால் அதிகம் விரும்பப்படும் நிறம் எது என்பது குறித்த சர்வே முடிவு வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
கார் வாங்குபவர்கள் எந்த நிறத்தை அதிகம் விரும்புகின்றனர் என்ற சுவாரஸ்யமான தகவல்கள் உலக அளவில் எடுக்கப்பட்ட சர்வே மூலம் தெரியவந்துள்ளது. அது குறித்த சில ஆச்சரியம் அளிக்கும் தகவல்களை இந்த தொகுப்பில் தொடர்ந்து காணலாம்.

சொகுசுக் காராக இருந்தாலும் சரி, சாதாரண காராக இருந்தாலும் சரி, எந்த வகையான கார் வாங்குபவர்களும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது காரின் நிறத்திற்கு மட்டுமே. சில சமயம் எந்த கார் வாங்கினாலும் பரவாயில்லை ஆனால் இந்த நிறத்தில் தான் கார் வாங்க வேண்டும் என குடும்பத்திற்குள் ஒரு கலவரமே வெடிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது காரின் நிறம்.

இதையே கருவாகக் கொண்டு உலக அளவில் கார் வாங்குபவர்கள் எந்த நிறத்தை அதிகம் தேர்வு செய்கின்றனர் எனஅறிந்துக்கொள்ள நினைத்த தனியார் நிறுவனம், இதற்காக சர்வே ஒன்றை தற்போது நடத்தியுள்ளது.

கொரியாவைச் சேர்ந்த Chosun Media என்ற தனியார் நிறுவனம் கடந்த ஆண்டில் விற்பனையான கார்களில் அதிகம் தேர்வு செய்யப்பட்ட நிறம் என்ன என்பது குறித்த சர்வேயை நடத்தியது. இது உலகம் முழுவதும் நடத்தப்பட்ட சர்வே ஆகும்.

இந்த சர்வேயின்படி கிரே எனப்படும் சாம்பல் மற்றும் சில்வர் வண்ண கார்களை தலா 11% பேர் வாங்கியுள்ளனர். இந்த இரண்டு நிறங்களும் அதிகம் விரும்பப்படும் நிறங்களில் 3வது இடத்தை கூட்டாகப் பிடித்துள்ளது.

கார் வாங்குபவர்கள் அதிகம் ஈர்க்கும் வண்ணமாக விளங்கும் கருப்பு நிறத்திலான கார்களை 18% பேர் வாங்கியுள்ளனர். இந்த சர்வேயில் கருப்பு நிறம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

கருப்பு நிறத்திற்கே இரண்டாம் இடம் என்றால் முதல் இடத்தை பிடித்தது சிவப்பு என நினைத்தால் அது தவறு. முதல் இடத்தை இந்த நிறம் தான் பிடித்துள்ளதா என்று நம்பவே மறுப்பீர்கள்.

இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது ‘வெள்ளை' நிறம். என்னதான் பல நிறங்களில் கார்கள் வெளிவந்தாலும் வெள்ளைக்கு எப்போதும் மவுசு தான். அரசியல்வாதிகள் தொடங்கி அதிகாரிகள், சாமானியர்கள் வரையிலும் அமைதியின் அடையாளமாக விளங்கும் வெள்ளை நிறத்திற்கு தான் அதிக மதிப்பு கொடுக்கின்றனர்.

எனினும் வெள்ளை கார்களை வாங்கியுள்ளவர்களின் விழுக்காடு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது. இந்த சர்வே முடிவில் முதல் இடத்தை பெற்ற வெள்ளை நிறத்திலான கார்களை உலகம் முழுவதிலும் 37% பேர் வாங்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. இது இரண்டாம் இடம் பெற்ற கருப்பு வண்ணத்தைக் காட்டிலும் 19% கூடுதல் ஆகும்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிவப்பு நிறம் இந்த சர்வே முடிவில் 4ஆம் இடத்தையே பெற்றுள்ளது. 10% பேர் மட்டுமே சிவப்பு வண்ணத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்தியாவில், 25 ஆண்டுகளுக்கு முன், அம்பாசிடர் மற்றும் பிரிமியர் பத்மினி மாடல் கார்கள் தான் பிரபலமாக இருந்தன. அதிலும், வெள்ளை நிற அம்பாசிடர் கார் என்பது ஒரு காலத்தில் கவுரவ சின்னமாக கருத்தப்பட்டது. எனினும் எந்தக்காலத்திலும் வெள்ளை கார்களுக்கே அதிகம் மவுசு என்பதனை இந்த சர்வே முடிவு உணர்த்துகிறது.

உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் ஒவ்வொரு நாட்டு மக்களும் ஒவ்வொரு நிறத்திற்கு முக்கியத்துவம் அளித்த போதிலும், ஆச்சரியம் அளிக்கும் வகையில் அனைத்து நாட்டிலுமே முதல் மூன்று இடத்தை பிடித்த நிறங்களின் வரிசையில் மாற்றமில்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை நிற கார்களை இவ்வளவு பேர் வாங்குவதன் பின்னணியில் ஒரு சூட்சுமமும் அடங்கியுள்ளது. இரவில் செல்லும் போது மற்ற கார்களைக் காட்டிலும் வெள்ளை நிற கார்கள் பளிச்சென தெரிவதால் விபத்துகளில் சிக்கும் வாய்ப்பு குறைகிறது.

அமைதியான நிறமான வெள்ளைக்கு பின்னால் பாதுகாப்பும் உள்ளதால் தான் வெள்ளை நிறத்தை உலக அளவில் அதிகம் பேர் தேர்வு செய்ய முக்கிய காரணாமாகவும் உள்ளது. எனவே கார் வாங்கும் முன்பு கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் நுண்சிந்தனையுடன் செயல்படவேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications








