விரைவில் விற்பனைக்கு வருகிறது புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி!
டாடா நெக்ஸான் எஸ்யூவியை முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
டாடா டியாகோ, டாடா டீகோர் மூலமாக கார் மார்க்கெட்டில் சிறப்பான இடத்தை பெற்றிருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக டாடா நெக்ஸான் என்ற புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

கடந்த ஆண்டு நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி மிக தீவிரமான சோதனை ஓட்டங்களில் இருந்து வருகிறது. இந்த நிலையில், விரைவில் இந்த கார் விற்பனைக்கு வருவது உறுதியாகி உள்ளது.

மிக வித்தியாசமான டிசைனுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி கார் மீது வாடிக்கையாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணம், காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக குறைவான விலை கொண்ட மாடலாக இதனை களமிறக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

ரூ.6 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்த புதிய எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வரும் என்பதால் அதிக ஆவல் உள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த எஸ்யூவி மாடலை முன்கூட்டியே மார்க்கெட்டில் களமிறக்கிவிட டாடா மோட்டார்ஸ் முடிவு செய்திருக்கிறது. ஆம். இந்த காரை வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன.

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, டாடா நெக்ஸான் வகை காருக்கான வரி 3 முதல் 14 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால், இந்த புதிய எஸ்யூவி மாடலை இன்னமும் சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

அத்துடன், கடந்த மாதம் வரை புதிய கார் வாங்கும் திட்டத்தை தள்ளிப் போட்டிருந்த பலரும், ஜிஎஸ்டி அமலுக்கு வந்துவிட்ட நிலையில் கார் வாங்கும் படலத்தை துவங்கி இருக்கின்றனர். இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் டாடா நெக்ஸான் எஸ்யூவியை முன்கூட்டியே அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

டாடா டியாகோ, டாடா டீகோர், டாடா நெக்ஸா உள்ளிட்ட மாடல்களின் வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் தாத்பரியத்தில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக முதலில் அறிமுகம் செய்யப்படடும். பின்னர், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரும் என்று தெரிகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா டியூவி300 போன்ற மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். டிசைன், இடவசதி, நவீன வசதிகள், விலை என அனைத்திலும் மிகச் சிறப்பான தேர்வாக புதிய டாடா நெக்ஸான் கார் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








