புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் எஞ்சின் விபரங்கள் வெளியானது
டாடா நெக்ஸான் எஸ்யூவி குறித்த சில முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
பண்டிகை காலத்தில் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த காரின் எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட இந்த காம்பேக்ட் எஸ்யூவி காரின் டீசர் படம் நேற்று முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டிசைன் தாத்பரியத்தில் வருவதால் இந்த டீசர் படம், எஸ்யூவி பிரியர்களின் ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

இந்த காரின் இன்டீரியர் பாகங்கள் மற்றும் இதர அம்சங்கள், உதிரிபாகங்கள் தரம் ஆகியவை டாடா டியாகோ மற்றும் டீகோர் கார்களுக்கு இணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video


இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1,198சிசி ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108.5 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

அடுத்து, டீசல் மாடலில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108.5 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த காரின் பெட்ரோல், டீசல் மாடல்களில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கும். பெட்ரோல், டீசல் மாடல்கள் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருவதையும் டாடா மோட்டார்ஸ் உறுதி செய்துள்ளது.

எஞ்சினிலிருந்து சக்கரங்களுக்கு சக்தியை கடத்தும் அமைப்பு ஏவிஎல், பாஷ், மாஹலே மற்றும் ஹனிவெல் நிறுவனங்களின் கொடுத்த ஆலோசனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் குஜராத் மாநிலம் சனந்த் தொழிற்பேட்டையில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையிலும், நெக்ஸான் டீசல் மாடல் மஹாராஷ்டிர மாநிலம் ரஞ்சன்கவுனில் உள்ள ஆலையிலும் உற்பத்தி செய்யப்படும்.

இந்த புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவுத் தலைவர் மாயங்க் பரீக் கூறுகையில்," வாடிக்கையாளர்களை திக்குமுக்காட வைக்கும் சிறந்த அம்சங்களுடன் இந்த புதிய எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

எஸ்யூவிக்கான சிறந்த தோற்றம், வசதிகள் மற்றும் செயல்திறன் மிக்க இதன் எஞ்சின்களுடன் இந்த காரை அறிமுகம் செய்ய இரு்ககிறோம். இந்த எஸ்யூவிக்கான இரண்டு எஞ்சின்களுமே ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த நிபுணர்கள், டெஸ்ட் டிரைவர்கள், ஆட்டோமொபைல் துறை ஆர்வலர்களின் கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்களின் அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய எஞ்சின்கள் நிச்சயமாக டாடா மோட்டார்ஸ் பிராண்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இந்த எஞ்சின்கள் சிறந்த ஓட்டுதல் அனுபவத்தையும், பயண அனுபவத்தையும் வழங்கும்," என்று கூறி இருக்கிறார்.

கடந்த ஆண்டு நொய்டாவில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில் கான்செப்ட் நிலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி தற்போது தயாரிப்பு நிலையை எட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் மிக தீவிரமான சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த கார் தற்போது மார்க்கெட்டில் களம் காண இருக்கிறது. மாருதி பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த கார் ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக சொல்லப்படுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








