மார்ச் விற்பனையில் இந்தியாவின் டாப் -20 கார்கள்!!
கடந்த மார்ச் மாத கார் விற்பனையில் முதல் 20 இடங்களை பிடித்த கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்திய வாடிக்கையாளர்கள் பட்ஜெட் கார்களுக்குத்தான் அதிக ஆதரவு தருவார்கள் என்ற பிம்பம் மெல்ல மாறத் துவங்கி இருக்கிறது. கடந்த மாதம் டொயோட்டா ஃபார்ச்சூனர், மாருதி பெலினோ, ஹூண்டாய் க்ரெட்டா போன்ற கார்களின் விற்பனை இதற்கு சான்றாக அமைந்துள்ளது. இந்த கார்கள் எந்தளவு வரவேற்பை பெற்றுள்ளன என்பதை கடந்த மாத விற்பனை பட்டியலை பார்த்தாலே புரிந்துவிடும். வாருங்கள் பட்டியலை பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்.

20. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ தனி வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றிருக்கிறது. டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின், விலை என அனைத்திலும் சிறப்பான தேர்வாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 5,157 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் விற்பனையை ஒப்பிடும்போது 28.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

19. மாருதி இக்னிஸ்
மாருதி இக்னிஸ் கார் ஆரம்பத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும், தான் ஒரு மாருதி மாடல் என்பதை விற்பனையில் காட்டி இருக்கிறது. ஆம், கடந்த மாதத்தில் 5,209 மாருதி இக்னிஸ் கார்கள் விற்பனையாகி இருக்கிறது. பட்ஜெட் கார் மார்க்கெட்டில் இது புதிய ரகத்தில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், மாருதிக்கு இது கூடுதல் எண்ணிக்கையை பெற்று தந்து வருகிறது.

18. மாருதி ஈக்கோ
மிக நீண்ட காலமாக போட்டி இல்லாமல் சீரான விற்பனை எண்ணிக்கையை மாருதி நிறுவனத்துக்கு வழங்கி வருகிறது மாருதி ஈக்கோ கார். கடந்த மாதத்தில் 5,525 மாருதி ஈக்கோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தியாவின் மிக குறைவான விலை 7 சீட்டர் கார் என்பது இதன் பலம்.

17. ஹூண்டாய் இயான்
கடந்த மாதத்தில் 5,747 ஹூண்டாய் இயான் கார்கள் விற்பனையாகி உள்ளன. ரெனோ க்விட் காரின் வருகையால் விற்பனையில் சற்று பின் வாங்கி இருக்கிறது. அதேநேரத்தில், ஹூண்டாய் நிறுவன பிரியர்களுக்கு தோதுவான விலையில் கிடைக்கும் கார் என்பது இதன் பலம்.

16. மாருதி எர்டிகா
சரியான விலை, போதுமான இடவசதி, குறைவான பராமரிப்பு செலவு போன்றவற்றுடன் மார்க்கெட்டில் கலக்கி வருகிறது மாருதி எர்டிகா. கடந்த மாததத்தில் 5,937 மாருதி எர்டிகா கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைவிட தற்போது விற்பனை சற்று அதிகரித்து இருப்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

15. மாருதி ஓம்னி
பட்டியலில் கடைசியாகட்டும், இடையிலாகட்டும், முதலிலாகட்டும் மாருதி தயாரிப்பு இல்லாத இடமே இல்லை. அந்த வகையில், 15வது இடத்தில் மாருதி ஓம்னி வேன் இடம்பெற்றிருக்கிறது. கடந்த மாதத்தில் 6,103 மாருதி ஓம்னி வேன்கள் விற்பனையாகி உள்ளன. அதிக இருக்கை வசதியுடன் தனிநபர் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கு ஏற்ற மிக குறைவான விலையில் கிடைக்கும் மினி வேன் என்பது இதன் சிறப்பு.

14. ஹோண்டா சிட்டி
மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டிதான் நம்பர்-1. அண்மையில் இந்த கார் பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வந்ததும் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் 6,271 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனையாகி உள்ளன. டிசைன், தரம், இடவசதியில் சிறந்து விளங்குகிறது.

13. டொயோட்டா இன்னோவா
சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள் மற்றும் ஏராளமான பிரிமியம் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனையில் சக்கை போடு போடுகிறது. விலை வெகுவாக உயர்த்தப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் இன்னோவா க்ரி்ஸ்ட்டாவுக்கு பேராதரவை வழங்கி வருகின்றனர். கடந்த மாதத்தில் 7,252 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் பிரிமியம் மாடல்களை விரும்புவது இன்னோவா க்ரிஸ்ட்டாவை வைத்து உணர்ந்து கொள்ள முடியும்.

12. மஹிந்திரா பொலிரோ
எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய மாடல்கள் வந்து குவிந்துவிட்ட போதிலும், ஸ்திரமான விற்பனையை தொடர்ந்து பெற்று வருகிறது மஹிந்திரா பொலிரோ. நீடித்த உழைப்பு, இடவசதி, நம்பகமான எஞ்சின் போன்றவை இதன் பலம். கடந்த மாதத்தில் 8,681 பொலிரோ எஸ்யூவி கார்கள் விற்பனையாகி உள்ளன. இது நிச்சயம் போற்றுதலுக்குரிய எண்ணிக்கை.

11. மாருதி செலிரியோ
பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது மாருதி செலிரியோ கார். கடந்த மாத்தில் 8,823 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைவிட கடந்த மாதம் விற்பனை சற்று குறைந்துவிட்டது.

10. ஹூண்டாய் க்ரெட்டா
ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடர்ந்து அபரிமிதமான ஆதரவு இருந்து வருகிறது. கடந்த மாதத்்தில் 10,001 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கார்கள் விற்பனையாகி உள்ளன. டிசைன், எஞ்சின் ஆப்ஷன்கள், வசதிகள் என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தன்னிறவை கொடுத்து வருகிறது.

09. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா
கடந்த மாதத்தில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை விற்பனையில் சிறிய வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார். கடந்த மாதம் 10,057 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகி உள்ளன. மாருதி பிராண்டில் கிடைக்கும் எஸ்யூவி என்பதே இதற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்து வருகிறது.

08. ரெனோ க்விட்
நம் நாட்டு கார் மார்க்கெட்டின் சூப்பர் டூப்பர் ஹிட் மாடலாக மாறி இருக்கிறது ரெனோ க்விட். கடந்த மாததத்தில் 10,296 ரெனோ க்விட் கார்கள் விற்பனையாகி உள்ளன. அசத்தலான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், குறைவான விலை போன்ற காரணங்களால் இந்த காரை வாடிக்கையாளர்கள் உச்சி முகர்ந்து வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

07. மாருதி வேகன் ஆர்
கடந்த மாதத்தில் மாருதி வேகன் ஆர் கார் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. நீண்ட காலமாக மாறுதல் எதுவும் செய்யப்படாமல் இருப்பது காரணமாக இருக்கலாம். கடந்த மாதத்தில் 12,105 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனையாகி உள்ளன. இருப்பினும், மாருதி நிறுவனத்துக்கு விற்பனையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.

06. ஹூண்டாய் எலைட் ஐ20
நம் நாட்டு கார் மார்க்கெட்டின் ஆணழகனாக நாம் வர்ணித்து வரும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட தினத்திலிருந்து மிகப்பெரிய விற்பனை பங்களிப்பை ஹூண்டாய் நிறுவனத்துக்கு வழங்கி வருகிறது. கடந்த மாதத்தில் 12,394 ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது மிகப்பெரிய எண்ணிக்கையாவே கருத முடியும்.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10
கடந்த மாதத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் 5வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 12,545 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகி உள்ளன. பட்ஜெட் விலையில் பிரிமியம் அம்சங்கள் கொண்ட மாடலாக இது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறது.

04. மாருதி ஸ்விஃப்ட்
கடந்த மாதத்தில் மாருதி ஸ்விஃப்ட் கார் 4வது இடத்தை பிடித்தது. பங்காளி பலேனோ காரால் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த மாதத்தில் 15,513 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி உள்ளன. துள்ளலான டிசைன், நம்பகமான எஞ்சின், அதிக மைலேஜ், சரியான விலையில் கிடைக்கும் சிறந்த ஹேட்ச்பேக் கார் மாடல்.

03. மாருதி டிசையர்
நம் நாட்டின் மிக அதிகம் விற்பனையாகும் செடான் வகை மாடல். கடந்த மாதத்தில் 15,894 டிசையர் கார்கள் விற்பனையாகி உள்ளன. அடுத்த மாதம் புதிய தலைமுறை டிசையர் கார் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், இந்த காரின் உற்பத்தி குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும், புதிய மாடலை வாங்கும் விதமாக பலர் இந்த மாடலை வாங்காமல் காத்திருக்கின்றனர். இதனால், விற்பனை குறைந்திருக்கிறது.

02. மாருதி பெலினோ
யாரும் எதிர்பாராத வண்ணம் மாருதி பெலினோ காரின் விற்பனை கடந்த மாதம் புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மாதத்தில் 16,426 பெலினோ கார்கள் விற்பனையாகி உள்ளன. வாடிக்கையாளர்கள் பிரிமியம் அம்சங்கள் பொருந்திய மாடல்களின் பக்கம் கவனத்தை திசை திருப்பி இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

01. மாருதி ஆல்ட்டோ
கடந்த மாதம் மாருதி ஆல்ட்டோ கார்தான் நம்பர்-1. கடந்த மார்ச்சில் 18,868 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. இது சிறந்த எண்ணிக்கைதான். அதேநேரத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, கடந்த மாத விற்பனை 14.6 சதவீதம் குறைந்துவிட்டது. ரெனோ க்விட் காரின் கடும் போட்டியை சமாளிக்க புதிய மாடலை களமிறக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே கருத முடியும்.

ஏப்ரலில் விலை உயர்வு இருக்கும் என்பதால் பல கார்களின் விற்பனை மிக கணிசமாக இருந்தன. மேலும், மஹிந்திரா பொலிரோ உள்ளிட்ட சில மாடல்களின் பிஎஸ்-3 மாசு தர எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களுக்கு மிகப்பெரிய அளவில் தள்ளுபடி வழங்கப்பட்டதும் விற்பனை அதிகரிக்க காரணமாக இருந்தது. வரும் மாதங்களில் இந்த பட்டியல் எவ்வாறு மாறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








