வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது... விலை குறைவான மாடல்!
வால்வோ நிறுவனத்தின் குறைவான விலை எஸ்யூவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
வால்வோ நிறுவனத்தின் விலை குறைவான எக்ஸ்சி40 எஸ்யூவி இந்திய இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. எனவே, இந்த எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.

சொகுசு ரக கார் மார்க்கெட்டில் ஜெர்மனியை சேர்ந்த ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த மூவேந்தர்களின் ஆதிக்கத்தை வென்று, இந்திய மார்க்கெட்டில் குறிப்பிட்ட வர்த்தகத்தை பெறும் முயற்சியில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த வால்வோ மிக தீவிரமாக களமிறங்கி வருகிறது.

தொடர்ந்து புதிய மாடல்களை களமிறக்கி வரும் அந்த நிறுவனம், விரைவில் தனது விலை குறைவான எக்ஸ்சி40 எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க உள்ளது. இந்த புத்தம் புதிய எஸ்யூவி ஆரம்ப விலை சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

வால்வோ நிறுவனத்தின் காம்பேக்ட் மோடுலர் ஆர்க்கிடெக்ச்சர் பிளாட்ஃபார்மில் புதிய எக்ஸ்சி40 எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் அந்த நிறுவனம் பார்வைக்கு கொண்டு வந்த 40 சீரிஸ் கான்செப்ட் மாடல்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மிக அட்டகாசமான ஸ்டைலில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவியில் முகப்பில் பெரிய க்ரில் அமைப்பும், வால்வோ லோகோவும் வசீகரிக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுடன், சுத்தியல் அமைப்பு போன்ற பகல்நேர ரன்னிங் விளக்குகள் அழகு சேர்க்கின்றன.

உயர்த்தப்பட்ட அமைப்புடன் காட்சி தரும் இந்த எஸ்யூவியில் பக்கவாட்டில் வீல் ஆர்ச்சுகள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. அதற்கு இணையான பெரிய வீல்களும் சிறப்பாக உள்ளன.

பின்புறத்தில் வால்வோ கார்களுக்குரிய L- வடிவிலான எல்இடி டெயில் லைட்டுகள், இரட்டை வண்ண பம்பர், இரட்டை குழல் புகைப்போக்கி, கருப்பு வண்ண கூரை அமைப்பு ஆகியவை கவர்ச்சியாக இருக்கின்றன.
Recommended Video


உட்புறத்திலும் மிக சிறப்பான வடிவமைப்பை பெற்றிருக்கிறது. மூன்று ஸ்போக்குகளுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், செங்குத்து வாட்டிலான தொடுதிரை அமைப்பு, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செங்குத்து வாட்டில் ஏசி வென்ட்டுகள் ஆகியவை போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன.

வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவியானது இந்தியாவில் இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. ஒரு மாடலில் 188 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் [D4] மற்றொரு மாடல் 245 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்[T5] ஆப்ஷனிலும் வர இருக்கிறது.

பெட்ரோல், டீசல் மாடல்களில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இருக்கும். மேலும், 148 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்[D3] ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவியின் டீசல் மாடல் மொமன்டம் மற்றும் இன்ஸ்க்ரிப்ஷன் ஆகிய இரு வேரியண்ட்டுகளிலும், பெட்ரோல் மாடல் ஆர்- டிசைன் என்ற வேரியண்ட்டிலும் கிடைக்கும்.

இந்த எஸ்யூவியில் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரேடார் அடிப்படையில் இயங்கும் பைலட் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் இன்பர்மேஷன் சிஸ்டம் உள்பட பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்று இருக்கிறது.

ரூ.35 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் பாதியில் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது. ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.
Via- Autocarindia


Click it and Unblock the Notifications








