இன்னோவா கார்களின் ஏர் பேக்குகளை குறி வைத்து கைவரிசை காட்டும் கொள்ளை கும்பல்.. பகீர் தகவல்கள்
டொயோட்டா இன்னோவா கார்களின் ஏர் பேக்குகளை குறி வைத்து கொள்ளை கும்பல் ஒன்று கைவரிசை காட்டி வருகிறது. இது குறித்து வெளியாகியுள்ள பரபரப்பான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டொயோட்டா இன்னோவா கார்களின் ஏர் பேக்குகளை குறி வைத்து கொள்ளை கும்பல் ஒன்று கைவரிசை காட்டி வருகிறது. இது குறித்து வெளியாகியுள்ள பரபரப்பான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கு சற்றும் சளைக்காமல் திருடப்படும் கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே உள்ளது. ஒரு சில கொள்ளையர்கள் கார்களை அப்படியே கொள்ளையடித்து விடுகின்றனர்.

ஆனால் வேறு சில கொள்ளையர்களோ சற்று இரக்க குணம் உள்ளவர்கள் போல. கார்களின் ஏதேனும் பார்ட்ஸ்களை மட்டுமே குறி வைத்து கொள்ளையடிப்பதை அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதாவது அலாய் வீல்கள், ஸ்டீரியோ சிஸ்டம்கள் என ஒரு சில பார்ட்ஸ்கள் மட்டுமே அவர்களின் குறி.

ஆனால் பெங்களூருவில் தற்போது நடைபெற்று வரும் சம்பவம் போலீசாரையும், கார் உரிமையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் கொள்ளையர்கள் தற்போது குறி வைத்திருப்பது கார்களின் ஏர் பேக்குகளை.

கார்களில் இடம் பெற்றிருக்கும் மிக முக்கியான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக ஏர் பேக் (Airbag) உள்ளது. இதனால் ஏர் பேக்குகள் தொடர்பான விழிப்புணர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் சமீப காலமாக அதிகரித்து கொண்டு வருகிறது.

எனவே பெரும்பாலான கார் உற்பத்தி நிறுவனங்கள், அனைத்து வேரியண்ட்களிலும் ஏர் பேக்குகளை ஸ்டாண்டர்டாக வழங்க தொடங்கியுள்ளன. இந்த சூழலில்தான் பெங்களூருவில் கார்களின் ஏர் பேக்குகளை குறி வைத்து கொள்ளையர்கள் திருட தொடங்கியுள்ளனர்.

அதிலும் கொள்ளையர்கள் அதிகம் குறி வைப்பது டொயோட்டா இன்னோவா கார்களைதான். Bangalore Mirror வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இது போன்று 4 கார்களில், கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இந்த 4 கார் உரிமையாளர்களில் ஒருவர் சோமசேகர். இவர் ஒரு தொழிலதிபர். இவரின் டொயோட்டா இன்னோவா காரை இரவு நேரத்தில் உடைத்த கொள்ளையர்கள், ஃப்ரண்ட் ஏர் பேக் கிட்களை (Front Airbag kits) கொள்ளையடித்துள்ளனர்.

அத்துடன் ஆடியோ சிஸ்டம், ஏசி கண்ட்ரோலர்கள், மிரர் கிட்கள் மற்றும் சன்கிளாஸ் ஹோல்டர் ஆகியவற்றையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இது போன்ற திருட்டு சம்பவம் நடைபெறுவது இதுவே முதல் முறை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''கொள்ளையர்கள் மிக துல்லியமாக செயல்பட்டுள்ளனர். எனவே அவர்கள் முன்னாள் மெக்கானிக்குகளாக இருக்கலாம் அல்லது தற்போது கார் சர்வீஸ் சென்டர்களில் வேலை செய்து வரலாம் என சந்தேகிக்கிறோம்'' என்றனர்.

ஏர் பேக்குகள் மிகவும் விலை உயர்ந்தவை. நவீன ஏர் பேக்குகளின் விலை 1 லட்ச ரூபாய் வரை வரும். எனவே பிளாக் மார்க்கெட்டில் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்வதற்காகவே கொள்ளையர்கள் ஏர் பேக்குகளை குறி வைத்து திருடியிருக்க கூடும்.

இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் மட்டும் நடந்து விடவில்லை. அமெரிக்காவில் ஒரு முறை, ஹோண்டா கார்களின் ஏர் பேக் சிஸ்டமை மட்டும் குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். அப்படி திருடப்பட்ட ஏர் பேக்குகள் ஆன்லைனில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.

எனவே கார் உரிமையாளர்கள் தங்கள் கார்களை பாதுகாப்பான இடங்களில் பார்க்கிங் செய்து கொள்வது நல்லது. அத்துடன் ஏர் பேக் போன்ற மிக முக்கியமான பார்ட்ஸ்களை அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களில் இன்ஸ்டால் செய்து கொள்வதே சிறந்தது.

குறிப்பாக ஏர் பேக்குகளை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் வாங்குவதை கார் உரிமையாளர்கள் தவிர்க்கலாம். செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் ஏர் பேக் வாங்குவதன் மூலம் கொஞ்சம் பணத்தை மிச்சம் பிடிக்கலாம்தான்.

ஆனால் விபத்து நிகழும் போது ஒரு வேளை ஏர் பேக் விரிவடையாமல் போய் விட்டால், காரில் பயணிப்பவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
More from DriveSpark
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








