பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரில் டீசல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!
பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி சொகுசு காரில் டீசல் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி சொகுசு காரில் டீசல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த பிப்ரவரியில் ஆட்டோ எக்ஸ்போவில் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், தற்போது பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி கார் டீசலிலும் வந்துள்ளது. டீசல் மாடல் லக்சுரி லைன் மற்றும் எம்- ஸ்போர்ட் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் இந்த புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரின் டீசல் மாடல் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஜிடி காருக்கு மாற்றாக இந்த 6 சீரிஸ் ஜிடி மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி டீசல் மாடலின் லக்சுரி லைன் வேரியண்ட்டில் க்ரோம் பாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. க்ரில் பம்பர் என பல இடங்களில் க்ரோம் அலங்கார பாகங்கள் ஆக்கிரமித்துள்ளன.

லக்சுரி லைன் வேரியண்ட்டின் உட்புறத்தில் இரண்டு பிரிவுகளாக இருக்கும் சன்ரூஃப், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் பின் இருக்கைகள், ஹெட்ரெஸ்ட், சன் பிளைண்ட் எனப்படும் திரைமறைப்புகள், ஆம்பியன்ட் லைட்டுகள், அலங்கார மரத் தகடுகள் ஆகியவை கொடுக்கப்படுகின்றன.

எம்- ஸ்போர்ட் வேரியண்ட்டில் பெர்ஃபார்மென்ஸ் பேக்கேஜ் கொடுக்கப்படுகிறது. விசேஷமான சைடு ஸ்கர்ட்டுகள், ரியர் அப்ரான், பெரிய ஏர் இன்டேக் மற்றும் எம்-ஸ்போர்ட் பிரேக் சிஸ்டம் ஆகியவை இடம்பெறுகிறது. தவிரவும், அலாய் வீல்கள், விசேஷமான எம் மாடலுக்கான பேட்ஜ், டோர் சில்களும் உண்டு.

எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில் நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, கான்ட்ராஸ்ட் தையல் வேலைப்பாடுகளுன் கூடிய இருக்கைகள், மெமரி வசதியுடன் இருக்கைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மென்மையாக மூடும் தொழில்நுட்ப வசதி கொண்ட கதவுகள் இதன் முக்கிய அம்சம்.

இந்த காரில் நிரந்தர அம்சங்களாக 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். பின் இருக்கை பயணிகளுக்காக 10.2 அங்குல திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூவின் விசேஷ நேவிகேஷன், ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

எம்- ஸ்போர்ட் மாடலில் கூடுதலாக ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. இதன்மூலமாக, ஓட்டுனர் கவனம் சிதறாமல் காரின் வேகம், சராசரி மைலேஜ் உள்ளிட்ட பல தகவல்களை காரின் விண்ட் ஸ்கிரீனிலேயே பார்த்துக் கொள்ள முடியும்.

இந்த காரில் பார்க்கிங் அசிஸ்ட் வசதி, பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல், காரை சுற்றிலும் கண்காணிக்கும் வசதியை அளிக்கும் சர்ரவுண்ட் வியூ கேமரா, ரிமோட் கன்ட்ரோல் மூலமாக எஞ்சினை ஆன் செய்யும் வசதி, 6 ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட் வசதியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

பிஎம்டபிள்யூ 630டீ ஜிடி மாடலில் இரண்டு டர்போசார்ஜர்கள் துணையுடன் இயங்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 265 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி கார் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் லாங் வீல் பேஸ் மாடலுடன் போட்டி போடும். பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி டீசல் காரின் லக்சுரி லைன் வேரியண்ட் ரூ.66.50 லட்சத்திலும், எம்- ஸ்போர்ட் வேரியண்ட் ரூ.73.70 லட்சம் விலையிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








