பொது சாலையில் ரேஸ்... மரத்தில் மோதி சுக்குநூறான பிஎம்டபிள்யூ கார்!
ஒடிஷாவில், பொது சாலையில் பந்தயத்தில் ஈடுபட்ட பிஎம்டபிள்யூ சொகுசு கார் பயங்கர விபத்தில் சிக்கியது.
Recommended Video

ஒடிஷாவில், கடற்கரை சாலையில் ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார்களில் இளைஞர்கள் நடத்திய நீயா, நானா ரேஸ் விபரீதத்தில் முடிந்தது. இந்த கோர சம்பவம் பல விஷயங்களை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

பொது சாலைகளில் கார், பைக் ரேஸ்களில் இளைஞர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனால், விபத்துக்களும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாத விஷயமாகி உள்ளது.
இதேபோன்று, ஒடிஷாவில் நேற்று நள்ளிரவு பந்தயத்தில் ஈடுபட்ட பிஎம்டபிள்யூ கார் கோர விபத்தில் சிக்கியது.

ஒடிஷா மாநிலத்தில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த புரி நகருக்கும் கோனாரக் நகருக்கும் இடையிலான கடற்கரை சாலை வாகன பிரியர்கள் மத்தியில் பிரபலமானது. மிக சிறப்பான இந்த சாலைகளில் பயணிப்பதற்காகவே பலர் வருகின்றனர்.

சென்னை- பாண்டிச்சேரி இசிஆர் சாலையை போன்றே இந்த சாலையில் கார், பைக்குகளில் இளைஞர்கள் ரேஸ் அடிப்பது வழக்கம். அவ்வாறு நேற்று நள்ளிரவு இளைஞர்கள் சிலர் பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி சொகுசு கார்களில் ரேஸ் அடித்துள்ளனர்.

பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் சிலர் புரி நகருக்கு திரும்பி உள்ளனர். அப்போது, எந்த கார் முந்தி செல்கிறது, யார் சிறப்பாக ஓட்டுகின்றனர் என்று கெத்தை காட்டும் வகையில் அந்த இளைஞர்கள் பந்தயம் கட்டி ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை பொதுச் சாலையில் நடந்த ரேஸ் விபரீதத்தில் முடிந்தது.

இரு கார்களும் போட்டி போட்டு அதிவேகத்தில் சென்றுள்ளன. அப்போது பிஎம்டபிள்யூ 320டீ சொகுச கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

இதில், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் சொகுசு காரில் பயணித்த புவனேஷ்வர் நகரை சேர்ந்த மஹாபத்ரா என்பவர் உயிரிழந்தார். காரை ஓட்டிய கல்யாண் கேஷ்ரி சமன்தராய், சுமன் பத்ரா மற்றும் சோனாலி பஹேரா ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

மரத்தில் மோதிய பிஎம்டபிள்யூ கார் அடையாளம் தெரியாத அளவுக்கு சுக்குநூறாக உருக்குலைந்தது. காரில் எவ்வளவு பாதுகாப்பு விஷயங்கள் இருந்தாலும், அதிவேகத்தில் செல்லும்போது அது அந்தளவு கைகொடுக்காது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் காரில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும், இந்த விபத்து குறித்த வழக்குப் பதிவு செய்த போலீசார், கார் பந்தயத்தில் ஈடுபட்ட மற்றொரு ஆடி சொகுசு காரில் வந்தவர்களை தேடி வருகின்றனர்.

இந்த சாலையில் இளைஞர்கள் பந்தயம் கட்டி வாகனங்களில் ரேஸ் அடிப்பதால், இது மரண சாலையாக வர்ணிக்கப்படுகிறது. இதனால், இந்த சாலையில் செல்வோருக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு நேரத்தில் அதிவேகத்தில் காரை இயக்குவது எந்தளவு ஆபத்தானது என்பது இந்த விபத்து மூலமாக தெரிய வருகிறது. அது எவ்வளவு விலை உயர்ந்த காராக இருந்தாலும், நிதானமான வேகத்தில் இரவு நேரத்தில் இயக்குவதும் அவசியம் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
Picture credti: Odishatv


Click it and Unblock the Notifications








