இந்தியாவில் புகாட்டி வேரோன் கார் வைத்திருக்கும் ஒரே நபர் ஷாருக்கான்? ரகசியத்திற்கு விடை கிடைத்தது..
இந்தியாவில் புகாட்டி வேரோன் கார் வைத்திருக்கும் ஒரே நபர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்தான் என மக்கள், ரசிகர்களிடையே பரபரப்பான பேச்சு இருந்து வந்தது.
இந்தியாவில் புகாட்டி வேரோன் கார் வைத்திருக்கும் ஒரே நபர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்தான் என மக்கள், ரசிகர்களிடையே பரபரப்பான பேச்சு இருந்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, ஷாருக்கானே தற்போது நேரடியாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் வேகமான கார்களில் ஒன்று புகாட்டி வேரோன். அல்டிமேட் ஹைப்பர் காராக கருதப்படும் புகாட்டி வேரோன் காரை, உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் பிரபலமான மனிதர்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடமும் புகாட்டி வேரோன் கார் இருப்பதாக இந்திய மக்களிடையே பரபரப்பான பேச்சு இருந்து வந்தது. புகாட்டி வேரோன் காரை, ஷாருக்கான் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களிலும் மிக வேகமாக தகவல்கள் பகிரப்பட்டன.

மக்களையும், ரசிகர்களையும் மிக நீண்ட நாட்களாக குழப்பத்தில் ஆழ்த்தி வந்த இந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதுவும் ஷாருக்கானே பதில் அளித்துள்ளார் என்பதுதான் இதன் சிறப்பம்சம். ஷாருக்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், #AskSRK என்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியை நடத்தினார்.

இதன்மூலமாக ரசிகர்கள், ஷாருக்கானிடம் கேள்விகளை கேட்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. இதன்படி ரசிகர்கள் பலர் வரிசையாக பல கேள்விகளை ஷாருக்கானிடம் கேட்டு கொண்டே வந்தனர். அந்த கேள்விகளில் ஒன்று புகாட்டி வேரோன் தொடர்புடையதாக இருந்தது.

ஷாருக்கானிடம் புகாட்டி வேரோன் கார் உள்ளதா? என்ற கேள்வியை, ரசிகர் ஒருவர் எழுப்பினார். இதற்கு ஷாருக்கான், 'இல்லை' என மிகவும் சிம்பிளாக பதில் அளித்தார். இதன்மூலம் ஷாருக்கானிடம் புகாட்டி வேரோன் கார் இல்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புகாட்டி வேரோன் காரில் ஷாருக்கான் எங்கேயுமே வந்து சென்றதில்லை. புகாட்டி வேரோன் காருடன், யாரும் அவரை பார்த்ததும் இல்லை. அப்படி இருக்கையில், புகாட்டி வேரோன் காரை ஷாருக்கான் சொந்தமாக வைத்திருக்கிறார் என்ற புரளி எங்கியிருந்து கிளம்பியது என்பது யாருக்குமே தெரியவில்லை.

உண்மையை சொல்வதென்றால், இந்திய மண்ணில் ஒரு புகாட்டி வேரோன் கார் கூட இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகாட்டி வேரோன் கார், இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக லான்ச் செய்யப்பட்டது. அப்போது வாடிக்கையாளர்கள் பலர், அதனை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தனர்.

ஆனால் அவர்களில் ஒருவர் கூட புகாட்டி வேரோன் காரை வாங்க முன்வரவில்லை. ஏனெனில் புகாட்டி வேரோன் கார் மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த காரை ஓட்டுவதற்கான தரம் வாய்ந்த டிராக் மற்றும் நல்ல சாலைகள் நமது இந்திய நாட்டில் இல்லை.

எனவே புகாட்டி வேரோன் போன்ற ஹைப்பர் கார்களை வாங்குவதில் இருந்து இந்தியர்கள் எப்போதும் ஒதுங்கியே இருக்கின்றனர். செல்வ செழிப்பு மிக்கவர்கள் கூட புகாட்டி வேரோன் போன்ற ஹைப்பர் கார்களை வாங்குவதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவது இல்லை.

புகாட்டி வேரோன் கார் 2 டோர் கூப் வகையை சேர்ந்தது. இந்த காரில் 8.0 லிட்டர் W-16 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. க்வாட்-டர்போசார்ஜர்களை பெற்றுள்ள இது, 1184 பிஎச்பி பவர் மற்றும் 1,500 என்எம் டார்க் திறனை வழங்கி சீறிப்பாய வல்லது.

புகாட்டி வேரோன் கார் மணிக்கு 431 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பறக்கும் வல்லமை வாய்ந்தது. மிகவும் லைட்வெயிட் என கருதப்படும் புகாட்டி வேரோன் கார், கார்பன் ஃபைபர் பார்ட்ஸ்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆன்ரோடு விலை கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய்.

ஷாருக்கானிடம் புகாட்டி வேரோன் கார் இல்லையென்றாலும் கூட, வேறு பல கவர்ச்சிகரமான கார்களை அவர் வைத்திருக்கிறார். பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் உள்ளிட்ட லக்ஸரி கார்கள் ஷாருக்கானிடம் உள்ளன.

அது மட்டும் இல்லாமல், பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கன்வர்டபிள் வகை காரையும் ஷாருக்கான் வைத்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, அவர் இந்த காரில் வந்து சென்றதை பல முறை பார்க்க முடிந்திருக்கிறது. இத்தனைக்கும் அந்த காரை ஷாருக்கானேதான் ஓட்டி வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








