ஃபோர்டு & மஹிந்திரா கூட்டணியில் உருவாகும் ஃபோர்டு ஏஸ்பையர் மின்சார கார்..!!
ஃபோர்டு & மஹிந்திரா கூட்டணியில் உருவாகும் ஃபோர்டு ஏஸ்பையர் மின்சார கார்..!!
ஃபோர்டு, மஹிந்திரா நிறுவனங்கள் இணைந்து மின்சார வாகனங்களை தயாரிக்கும் செய்தி முன்பே வெளியானது தான். இதுகுறித்து மேலும் புதிய அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதுக்குறித்து செய்தி வெளியிட்டுள்ள இடி ஆட்டோ, ஃபோர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இணைந்து ஏஸ்பையர் மாடலில் மின்சார ஆற்றல் கொண்ட காரை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த மாடலுக்கு ஃபோர்டு ஏஸ்பையர் இவி என்று பெயர் சூட்டலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த புதிய மின்சார கார் அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.

மின்சார ஆற்றல் கொண்ட ஏஸ்பையர் செடான் தவிர்த்து, ஃபோர்டு மற்றும் மஹிந்திரா புதிய பிளாட்ஃப்பார்மின் கீழ் எஸ்யூவி காரை 2 வித வேரியன்டுகளில் தயாரிக்கவுள்ளன. அதில் ஒரு மாடல் ஃபோர்டு நிறுவனத்துக்கும், மற்றொன்று மஹிந்திராவிற்காகவும் தயாராகவுள்ளன.

மின்சார வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் மஹிந்திராவிற்கு ஏற்கனவே அனுபவம் உள்ளதால், ஏஸ்பையர் இவி உருவாக்க பணிகளுக்காக ஃபோர்டு நிறுவனத்திற்கு தோள் கொடுத்து உதவி வருகிறது.
இதே நேரத்தில் மஹிந்திரா அளிக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஃபோர்டு நிறுவனமும் முனைப்பு காட்டி வருகிறது.

தற்போது டீசல் மற்றும் பெட்ரோலில் விற்பனையாகும் மாடல்களை விட மின்சார ஆற்றலில் தயாராகும் ஏஸ்பையர் கார் சற்று நீளம் அதிகமாக இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஃபோர்டுடன் இணைந்து மின்சார கார்களை தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மஹிந்திரா 2017 செப்டம்பர் மாதம் மேற்கொண்டது. இதன்படி தயாராகி வரும் மின்சார ஏஸ்பையர் காரை ஃபோர்டு நிறுவனம் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளது.

மஹிந்திராவின் வெரிட்டோ மின்சார செடான் காரை பின்பற்றி ஃபோர்டு நிறுவனத்தின் ஏஸ்பையர் இவி கார் உருவாகும் என தெரிகிறது.
வெரிட்டோ காரில் 72வி லித்தியம்-ஐயம் பேட்டரி உள்ளது. வேகமாக சார்ஜாகும் திறன் பெற்ற இந்த பேட்டரி அதிகப்பட்சமாக 110 கி.மீ வரை இயங்கும்.

ஃபோர்டு, மஹிந்திரா கூட்டணியில் உருவாகி வரும் முற்றிலும் புதிய எஸ்யூவி கார், அந்நிறுவனங்களுக்கு உரிய வடிவமைப்பு தத்துவத்திலிர்ந்து மாறுப்பட்டதாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளில் வாகன பயன்பாட்டிற்கான எதிர்காலம் மின்சார ஆற்றலில் தான் உள்ளது. அதனால் இந்த செக்மென்டை குறிவைத்து பல்வேறு நிறுவனங்கள் களம் கண்டுவருகின்றனர்.

தற்போது இதில் ஜாம்பாவான திகழும் மஹிந்திராவுடன் ஃபோர்டு நிறுவனமும் இணைந்துள்ளது. இதன் காரணமாக இந்த செக்மென்ட் இந்தியாவில் கடும்போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் ஒருபக்கம் தீவிரமாக இயங்கி வந்தாலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் இவி காரும் மின்சார வாகன வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications








