மலிவான விலையில் கிடைக்கும் சிஎன்ஜி கார்களின் பட்டியல்... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கவலை வேண்டாம்
பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அவற்றின் விலை இப்போது குறையும், அப்போது குறையும் என எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அவற்றின் விலை இப்போது குறையும், அப்போது குறையும் என எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக சிஎன்ஜி கார்களை பயன்படுத்தலாம். அப்படி மலிவான விலையில் கிடைக்கும் சிஎன்ஜி கார்களின் பட்டியலை இந்த செய்தியில் காணலாம்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அவற்றின் விலையை மத்தியில் ஆளும் பாஜ அரசு குறைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்து, பல நாட்களாகி விட்டது. இதனால் தங்கள் பயணங்களுக்கு, மாற்று வழியை மக்கள் நாட தொடங்கி விட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிப்பதற்காக, பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு மாறலாம். ஆனால் அனைத்து இடங்களுக்கும் பொது போக்குவரத்து மூலமாக பயணிப்பது சாத்தியமாகாது. அத்துடன் அது அவ்வளவு சவுகரியமாக இருக்காது. இதனால் சொந்த கார் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தியே ஆக வேண்டிய நெருக்கடி மக்களுக்கு உள்ளது.

இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் சிஎன்ஜி கார்கள் நல்ல தீர்வாக அமையும். சிஎன்ஜி என்பது நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு. பெட்ரோல், டீசலை காட்டிலும் சிஎன்ஜி-யின் விலை குறைவு. நல்ல மைலேஜ் கிடைக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. இப்படி இதன் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

ஆனால் ஒரு சிலர், தங்கள் கார்களுக்கு தனிப்பட்ட முறையில் சிஎன்ஜி கிட் பொருத்தி கொள்கின்றனர். அப்படிப்பட்ட வசதிகள் உள்ளன. ஆனால் அவை அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்கும் என்று சொல்லி விட முடியாது. எனவே மலிவான விலையில் கிடைக்கும், சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட கம்பெனி கார்களின் பட்டியலை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.

டாட்டா நேனோ இமேக்ஸ் சிஎன்ஜி
டாட்டா நேனோ இமேக்ஸ் சிஎன்ஜி காம்பேக்ட் ஹேட்ச்பேக் வகையை சார்ந்தது. இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை மலிவான சிஎன்ஜி கார்களில் இதுவும் ஒன்று. இதன் விலை 2.96 லட்ச ரூபாய் மட்டுமே.

மாருதி சுசூகி ஆல்டோ சிஎன்ஜி
லாபகரமான விலையில் கிடைத்தாலும் கூட ஒரு சிலர் டாட்டா நேனோ இமேக்ஸ் சிஎன்ஜி காரை வாங்குவது இல்லை. அதற்கு காரணம் அந்த காரின் பாதுகாப்பு அம்சங்களில் நம்பிக்கை இல்லாததே. அப்படிப்பட்டவர்கள் மாருதி சுசூகி ஆல்டோ சிஎன்ஜி காரை முயற்சி செய்து பார்க்கலாம். இதுவும் ஹேட்ச்பேக் வகை கார்தான்.

ஆல்டோ 800 காரில் 2 சிஎன்ஜி வேரியண்ட்கள், ஆல்டோ கே10 காரில் 2 சிஎன்ஜி வேரியண்ட்கள் என மொத்தம் 4 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. இதன் ஆரம்ப விலை 3.71 லட்சம். இந்த விலையில் கிடைக்க கூடிய கார் ஆல்டோ 800 சிஎன்ஜி. ஆல்டோ கே10 சிஎன்ஜி காரின் ஆரம்ப விலை 4.14 லட்ச ரூபாய்.

மாருதி சுசூகி வேகன் ஆர் சிஎன்ஜி
மாருதி சுசூகி வேகன் ஆர், இந்தியாவின் வெற்றிகரமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு இந்த காரின் தாராளமான கேபின் ஸ்பேஸ், மலிவான விலை ஆகியவையே காரணம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-5 கார்களில், மாருதி சுசூகி வேகன் ஆர் தவறாமல் இடம்பிடித்து விடும். இதைப்பார்த்த பின்புதான் மாருதி நிறுவனமே, சிஎன்ஜி வேரியண்ட்டை சேர்த்தது. சிஎன்ஜி பொருத்தப்பட்ட வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை 4.68 லட்சம்.

மாருதி சுசூகி செலீரியோ சிஎன்ஜி
சிஎன்ஜி கிட் வழங்கும் மற்றொரு மாருதி சுசூகி நிறுவனத்தின் தயாரிப்பு செலீரியோ சிஎன்ஜி. இதுவும் கூட ஹேட்ச்பேக் வகையை சேர்ந்த கார்தான். இந்த கார் 2 பேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை 5.14 லட்சம்.

மாருதி சுசூகி எர்டிகா சிஎன்ஜி
நமது பட்டியலில் கடைசியாக காண இருக்கும் காரும் மாருதி சுசூகி நிறுவனத்தின் தயாரிப்புதான். ஆனால் அது யாரும் எதிர்பார்க்காத ஒரு கார். மாருதி சுசூகி எர்டிகா சிஎன்ஜிதான் அது.

மிகவும் புகழ்பெற்ற எர்டிகா எம்பிவி காரில், சிஎன்ஜி வெர்ஷனை மாருதி சுசூகி சமீபத்தில் சேர்த்துள்ளது. ஆனால் சிஎன்ஜி வெர்ஷன் வெறும் ஒரே ஒரு வேரியண்ட்டில்தான் கிடைக்கிறது. அதுவும் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்தான் உள்ளது (ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் மாடல்கள் பெட்ரோல் வேரியண்ட்களில் கிடைக்கின்றன).

மாருதி சுசூகி எர்டிகா சிஎன்ஜி காரின் விலை 8.27 லட்ச ரூபாய். இந்த காரில் 7 பேர் அமர்ந்து பயணிக்கலாம். மேற்குறிப்பிட்ட கார்கள் அனைத்தின் விலையும், டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

சிஎன்ஜி கார்களில் பல நன்மைகள் காணப்பட்டாலும், ஒரு சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. இதில், முக்கியமான பிரச்னை சிஎன்ஜி நிரப்பும் மையங்கள்தான். பெட்ரோல், டீசல் பங்க்குகளை போல் இன்னும் சிஎன்ஜி நிரப்பும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அவை குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளன.

குறிப்பாக தமிழகத்தில் சிஎன்ஜி நிரப்பும் மையங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே உள்ளது. சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் சிஎன்ஜி நிரப்பும் மையங்கள் கணிசமான அளவில் உள்ளன. எனவே தங்கள் காரை சிஎன்ஜி எரிபொருளில் ஓட்டும் வாய்ப்பு பெரும்பாலும் மெட்ரோ நகர மக்களுக்கே கிடைக்கும்.

ஆனால் அதற்காக பயப்பட வேண்டியது இல்லை. சிஎன்ஜி கார்கள், பெட்ரோலிலும் இயங்க கூடிய வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். சிஎன்ஜி இல்லாவிட்டால் மாற்று எரிபொருளாக பெட்ரோலை பயன்படுத்தி கொள்ளலாம்.

அந்தந்த மாநில அரசுகள் எல்லாம், கெயில் அமைப்புடன் இணைந்து, விரைவாக சிஎன்ஜி நிரப்பும் மையங்களை அதிகப்படியான எண்ணிக்கையில் உருவாக்கினால், சிஎன்ஜி கார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு நன்மை கிடைப்பதுடன், மக்களின் பணமும் மிச்சமாகும்.


Click it and Unblock the Notifications