சிசிடிவியாம், ஸ்லீப்பராம், ஜிபிஎஸ் வசதியாம்... அசத்த வரும் புதிய அரசு பேருந்துகள்!!
தமிழக அரசு புதிதாக வாங்க இருக்கும் பஸ்களில் யாரும் எதிர்பாராத அளவுக்கு அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற இருக்கின்றன.
தமிழக அரசு புதிதாக வாங்க இருக்கும் பஸ்களில் யாரும் எதிர்பாராத அளவுக்கு அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற இருக்கின்றன. குறிப்பாக, குடிபோதையில் ஓட்டுனர் இயக்குவதற்கு தடுப்பதற்கு புதிய கருவி பொருத்தப்படுகிறது.

தமிழக அரசு இயக்கும் பேருந்துகள் பெரும்பாலானவை போதிய பராமரிப்பு இல்லாமல் அபாயக்கட்டத்தில் இயக்கப்படுகின்றன. கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநில போக்குவரத்து கழகங்கள் மிகச் சிறப்பான வசதிகளுடன் பேருந்துகளை இயக்கும் நிலையில், தமிழக பேருந்துகளை பார்த்து பலர் ஏக்க பெருமூச்சு விட்டபடி உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணிப்பது வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில், அரசு பேருந்துகள் மீதான பிம்பத்தை முற்றிலும் மாற்றுவதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, தனியார் பேருந்துகளைவிட அதிக வசதிகளுடன் அரசு பேருந்துகளை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட மாதிரி பேருந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "இந்த நிதி ஆண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக வாங்கப்படும் பேருந்துகள் மிக தரமான கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்," என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, புதிய அரசு பஸ்களில் இடம்பெற இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவை தனியார் பேருந்துகளை விஞ்சும் அளவுக்கு புதிய அரசு பேருந்துகள் வர இருப்பதை உறுதி செய்துள்ளன.

கர்நாடக அரசு பேருந்துகளில் இருப்பது போலவே, புதிய அரசு பேருந்துகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட இருக்கின்றது. இந்த கருவி மூலமாக குறிப்பிட்ட வேக வரம்பிற்கு மேல் பேருந்தை இயக்க முடியாது. இந்த கருவிகள் பழுது இல்லாமல் நீண்ட நாள் உழைக்கும் வகையில் மிக தரமானதாக இருக்கும்.

புதிய பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட இருக்கின்றது. ஜிபிஎஸ் கருவி மூலமாக அடுத்து வரும் நிறுத்தம் குறித்த அறிவிப்புகளும் செய்யப்படும்.

மொபைல்போன் செயலி மூலமாகவே பஸ் எங்கு இருக்கிறது, எப்போது வரும் என்பது குறித்த தகவல்களை பயணிகள் பெற முடியும். எதிர்காலத்தில் புதிய அரசு பேருந்துகளில் வைஃபை இணைய தொடர்புக்கான வசதியை அளிக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது.

தற்போதுள்ள பஸ்களின் இருக்கையை 105 டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொள்ளும் புஷ் பேக் வசதி இருந்தது. புதிய பஸ்களில் 115 டிகிரி கோணத்தில் இருக்கையை சாய்த்துக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட இருக்கிறது. நீண்ட தூர தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் இந்த இருக்கைகள் கொடுக்கப்படும். இதனால், சவுகரியமான பயணத்தை பெற முடியும்.

இதுதவிர, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. நீண்ட தூர பேருந்துகளில் கழிவறை வசதியும், மிதவை சஸ்பென்ஷன் அமைப்புடன் சொகுசு பஸ்கள் கட்டப்பட உள்ளன.

புதிய அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட இருக்கின்றன. இதனால், பயணிகளின் பாதுகாப்பு மேம்படும் வாய்ப்பை கொடுக்கும். குற்றங்கள் குறையவும் வாய்ப்பு ஏற்படும்.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கிய வசதியாக புதிய அரசு பேருந்துகளில் ஓட்டுனர் குடிபோதையில் இருந்தால் பேருந்தை ஸ்டார்ட் செய்ய முடியாதபடி, புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஓட்டுனர் பேருந்தை இயக்குவதற்கு முன்பாக இருக்கையின் அருகே இருக்கும் ப்ரீஸ் அனலைசர் கருவியில் ஊத வேண்டும். ஒருவேளை, ஓட்டுனர் மது அருந்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாது.

இதனால், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுதவிர்த்து, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டமும் புதிய அரசு பேருந்துகளில் கொடுக்கப்பட இருக்கிறது.

டயரில் காற்றழுத்தம் குறைந்தால், உடனடியாக ஓட்டுனர் முன் உள்ள சிறிய திரையில் அதுகுறித்த எச்சரிக்கை தகவல் வரும். உடனடியாக, பேருந்தை நிறுத்த முடியும் என்பதால், விபத்தை தவிர்க்கும் வாய்ப்பை வழங்கும்.

இதுதவிர, சென்னை மட்டுமின்றி, இதர நகரங்களிலும் அரசு மினி பஸ் சேவையை கொண்டு செல்வதற்கும், சென்னையில் இயக்குவதற்காக 200 மின்சார பஸ்களை வாங்குவதற்கும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








