போனியாகலை... ஹோண்டா பிரியோ இந்தியாவிலிருந்து விலக்கப்படுகிறது!
ஹோண்டா பிரியோ காரின் விற்பனையை இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டாம் தலைமுறை பிரியோ கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படாது என்
விற்பனையில் படுமோசமாக இருந்து வரும் ஹோண்டா பிரியோ கார் இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பெரும் எதிர்பார்ப்புடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா பிரியோ கார் ஆரம்பத்தில் அப்படி, இப்படி விற்பனையில் போக்கு காட்டியது. விலை குறைவான பட்ஜெட் ரகத்தில் வந்ததால், நிச்சயம் ஹோண்டா பிராண்டுக்கு உரிய மதிப்புடன் விற்பனையில் கலக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த காரில் ஹோண்டா பிராண்டின் நன்மதிப்பான 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருந்ததால், வரவேற்பை பெறும் என்றும் ஹோண்டா நம்பியது. அத்துடன், 5 லட்சம் ஆரம்ப விலை என்பதும் அதீத நம்பிக்கை வைக்க காரணம்.

ஆனால், இந்த காரின் டிசைன் எல்லோருக்கும் பிடித்த மாதிரி அமையவில்லை. குறிப்பாக, வினோதமான பின்புற டிசைன் எல்லோரையும் கவரவில்லை. இந்த நிலையில், சந்தைப் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஹோண்டா பிரியோ கார் விற்பனையில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. மேலும், மாதத்திற்கு 500 கார்கள் கூட விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹோண்டா பிரியோ காரின் விற்பனையை இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அண்மையில் இரண்டாம் தலைமுறை ஹோண்டா பிரியோ கார் ஹோண்டா ஆர்எஸ் என்ற கான்செப்ட் மாடலாக பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால், இரண்டாம் தலைமுறை பிரியோ கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படாது என்று ஹோண்டா தெரிவித்துள்ளது. புதிய பிரியோ காருக்கான முதலீடு செய்வதை விரும்பாமல், அதற்கு பதிலாக பல புதிய மாடல்களை அறிமுகம் செய்யவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

இதன்படி, எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது. பிரியோவில் விட்டதை, இந்த புதிய எஸ்யூவியை வைத்து பிடிப்பதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாருதி பிரெஸ்ஸா உள்ளிட்ட கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








