புதிய ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய வருகை விபரம்!!
இந்தியாவில் தனது முதல் மின்சார கார் மாடலாக புதிய கோனா எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனை
ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவியின் இந்திய வருகை குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கிறது.இதுகுறித்த விரிவான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வாகனங்களால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வரும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் மின்சார கார்களை களமிறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார கார் வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் தனது முதல் மின்சார கார் மாடலாக புதிய கோனா எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்த புதிய எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஹூண்டாய் இந்தியா நிர்வாக இயக்குனர் ஒய்.கே.கூ கூறுகையில்," புதிய மின்சார எஸ்யூவி உள்பட 8 புதிய கார் மாடல்களை வரும் 2020ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமமிட்டுள்ளோம்," என்று கூறி இருக்கிறார்.

இதனால், புதிய கோனா மின்சார எஸ்யூவியின் இந்திய வருகை உறுதியாகி இருக்கிறது. முதலில் கோனா மின்சார எஸ்யூவி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும். பின்னர், சென்னையிலுள்ள ஆலையில் உற்பத்தி துவங்கப்படும்.

ஆரம்ப கட்டத்தில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்பதால், விலை அதிகம் இருக்கும். உள்நாட்டிலேயே உற்பத்தி துவங்கும்போது விலை கணிசமாக குறையும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் புதிய ஹூண்டாய் கோனா எஸ்யூவி இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. 39.2kW திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்ட மாடல் 299 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

இந்த மாடலில் இருக்கும் மின் மோட்டார் 133 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 மணி 10 நிமிடங்கள் ஆகும். குயிக் சார்ஜர் மூலமாக 54 நிமிடங்களில் பேட்டரியை 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்ய முடியும்.

அதிக திறன் வாய்ந்த 64kW பேட்டரி பொருத்தப்பட்ட மாடலானது 469 கிமீ தூரம் வரை பயணிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். இந்த மாடலில் பொருத்தப்பட்டு இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வத்கு 9 மணி 40 நிமிடங்கள் ஆகும். குயிக் சார்ஜர் மூலமாக 54 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்ய முடியும். இந்த மாடல் மணிக்கு 167 கிமீ வேகம் வரை செல்லலும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2018 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் 8 புதிய தயாரிப்புகளை களமிறக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இதில், 3 மாடல்கள் குறித்த விபரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக, புதிய ஹூண்டாய் சான்ட்ரோவும், அடுத்து கர்லினோ கான்செப்ட் அடிப்படையிலான காம்பேக்ட் எஸ்யூவியும் களமிறக்கப்பட இருக்கின்றன. மூன்றாவது மாடலாக கோனா மின்சார எஸ்யூவி வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications