புதிய ஹூண்டாய் சான்ட்ரோ அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!!
வரும் அக்டோபர் 4ந் தேதி புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. அதே அக்டோபர் மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.
புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுகம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பண்டிகை காலத்தில் சிறிய ரக கார் வாங்க இருப்பவர்களுக்கு சிறப்பான தேர்வாக வர இருக்கும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ அறிமுகம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதல் கார் மாடலாக வெளிவந்து விற்பனையில் சக்கைபோடு போட்ட சான்ட்ரோ கார் சில ஆண்டுகளுக்கு முன் விற்பனையிலிருந்து விலக்கப்பட்டது. அதன் ரகத்தில் சரியான மாடல் இல்லாமல் இருந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஹூண்டாய் மோட்டார்ஸ் புதிய காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.

AH2 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த கார் தற்போது தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பண்டிகை காலத்தில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வர இருப்பதை ஹூண்டாய் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

வரும் அக்டோபர் 4ந் தேதி புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. அதே அக்டோபர் மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இதனிடையே, ஹூண்டாய் சான்ட்ரோ காரின் வரிசையிலான புதிய மாடல் என்பதை சட்டென தெரிந்து கொள்ளும் விதத்தில், பெயரில் கூடுதலாக துணைப்பெயர் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சான்ட்ரோ ஸிங் என்ற பெயரில் வந்தது போல சான்ட்ரோ பெயருடன் கூடுதலாக துணைப்பெயருடன் வர இருக்கிறது இந்த புதிய பட்ஜெட் கார். சான்ட்ரோ பெயரில் வந்தாலும், இது முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்பு, நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வருகிறது.

சான்ட்ரோவுடன் கூடுதலாக சேர்க்கப்படும் புதிய பெயருக்கு பரிந்துரை செய்வதற்கு ரசிகர்கள், வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக விசேஷ போட்டி ஒன்றை வரும் ஆகஸ்ட் 16ந் தேதி நடத்துவதற்கு ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மட்டுமின்றி, சிஎன்ஜி மற்றும் எல்பிஜி ஆகிய எரிவாயுவில் இயங்கும் ஆப்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்படும் ென தெரிகிறது. இந்த காரில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பா்க்கப்படுகிறது. இயான் மற்றும் கிராண்ட் ஐ10 ஆகிய கார்களுக்கு இடையிலான பட்ஜெட்டில் நிலைநிறுத்தப்படும். மாருதி வேகன் ஆர், செலிரியோ மற்றும் டாடா டியாகோ கார்களுக்கு நேரடியாக போட்டியாக இருக்கும்.
Source: ACI


Click it and Unblock the Notifications








