அரபு நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்த மோடியின் புதிய திட்டம்... இந்தியாவில் இனி நடக்கப்போவது இதுதான்
மோடியின் புதிய திட்டம் ஒன்றின் காரணமாக, அரபு நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மோடியின் புதிய திட்டம் ஒன்றின் காரணமாக, அரபு நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் டூவீலர், கார், பஸ் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவை முன்னெப்போதையும் விட தற்போது வெகுவாக உயர்ந்துள்ளது.

இதனால் பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்க்கான தேவையும் அதிகரித்து, சர்வதேச சந்தையில் அதன் விலை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளிடம் போதிய அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லை.

அதே சமயத்தில் கச்சா எண்ணெய் வளம் மிக்க நாடுகள் ஒருங்கிணைந்து 'ஓபெக்' (Organisation of the Petroleum Exporting Countries-OPEC) என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில், சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை நிர்ணயிப்பதில், ஓபெக் கூட்டமைப்பின் கைதான் பெரும்பாலும் ஓங்கி நிற்கிறது. எனவே ஓபெக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன.

ஓபெக் கூட்டமைப்பானது சில சமயங்களில் வேண்டுமென்றே கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதன் விலையை உயர செய்து விடுகிறது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

இந்தியாவும் இதற்கு விதி விலக்கு அல்ல. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் ஒரு ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது!!!

எனவே இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் முயற்சிகளை மிக தீவிரமாக எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் எத்தனால், மெத்தனால், சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடும் வெகுவாக ஊக்குவிக்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு வருங்காலங்களில் வெகுவாக குறையும்.

இதன்மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகையும் பெருமளவிற்கு குறைந்து, நாட்டின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும். அத்துடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

ஆம், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது, சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காது. அவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தவை.

பொருளாதார ரீதியாக கிடைக்கும் நன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற காரணங்களால்தான், எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இந்தியா ஊக்குவித்து வரும் மாற்று எரிபொருட்களில் மெத்தனாலும் முக்கியமான ஒன்று. தற்போதைய நிலையில் இந்தியாவின் மெத்தனால் பொருளாதாரம் வெறும் 11 ஆயிரம் கோடி ரூபாய் என்கிற அளவில் மட்டுமே உள்ளது.

ஆனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் விதமாகவும், சுத்தமான எரிபொருளை ஊக்குவிக்கும் விதமாகவும், அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவின் மெத்தனால் பொருளாதாரத்தை 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.

ஓரிரு நாட்களுக்கு முன்பு, நாட்டின் தலைநகர் புது டெல்லியில் எலெக்ட்ரிக் வாகன கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த தகவல்களை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தாத போக்குவரத்து முறைகளை ஊக்குவிக்க மத்திய அரசு தொடர்ந்து தீவிரமான முயற்சிகளை எடுத்து கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாகதான் 11 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ள மெத்தனால் பொருளாதாரத்தை, அடுத்த 5 ஆண்டுகளில், 1.5 லட்சம்-2 லட்சம் கோடியாக உயர்த்த முடிவு செய்து, அதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தியுள்ளோம்.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மிகப்பெரிய தொகையை செலவிடுவதால், அந்திய செலாவணி கையிருப்பின் பெரும்பகுதியை இழந்து விடுகிறோம். எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். இதற்காகதான் இத்தகைய முயற்சிகள் எடுக்கப்படுகிறது.

இஸ்ரேல் நாட்டில் ஒரு லிட்டர் மெத்தனால் 12 ரூபாய்க்கும், சீனாவில் ஒரு லிட்டர் மெத்தனால் 16 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் மெத்தனாலின் விலை 22 ரூபாய். என்றாலும் பெட்ரோல், டீசலை விட மிகவும் குறைவான விலையில்தான் விற்பனையாகிறது'' என்றார்.

இந்தியா எடுத்து வரும் இதுபோன்ற நடவடிக்கைகளின் காரணமாக, வருங்காலத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி படிப்படியாக குறையும். இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கோலோச்சி வரும் அரபு நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

ஏனெனில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 3வது இடத்தில் உள்ளது. அப்படிப்பட்ட இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதியை வெகுவாக குறைத்து விட்டால், அரபு நாடுகள் பாதிக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.


Click it and Unblock the Notifications








