ஆம்புலன்ஸில் இருந்தவர்களின் உயிரை காக்க புத்திசாலித்தனமாக செயல்பட்ட போலீஸ்காரர்... வைரல் வீடியோ
ஆம்புலன்ஸில் இருந்தவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக, இளம் போலீஸ்காரர் ஒருவர் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி கொண்டுள்ளது.
ஆம்புலன்ஸில் இருந்தவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக, இளம் போலீஸ்காரர் ஒருவர் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கும் சூழலில், அந்த போலீஸ்காரருக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. விபத்துக்களின் காரணமாக, இந்திய சாலைகளில் ஒரு ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

எனவே சாலை விபத்துக்களினால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்று உருவெடுத்து நிற்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கிய நபர்களுக்கு, உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பது இல்லை. சாலை விபத்துக்களில் சிக்கி போராடி கொண்டிருக்கும் நபர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் பட்சத்தில், அவர்களது உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

ஆங்கிலத்தில் இதனை 'கோல்டன் ஹவர்' (Golden Hour) என குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் வெகுவாக நிலவி கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் கூட, சாலை விபத்துக்களில் சிக்கிய நபர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை தடை செய்து விடுகிறது.

விபத்துக்களில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நபர்களை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ்கள், சில சமயங்களில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டிருப்பதை, நம்மில் அனைவரும் கண் கூடாக பார்த்திருக்க முடியும்.

உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றாக இந்திய சாலைகள் உள்ளன. இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதே இல்லை. இதனால் தேவையற்ற குழப்பம் உண்டாகி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.

இதுதவிர மிகவும் குறுகலான சாலைகள் மற்றும் சாலைகள் ஆக்கிரமிப்பு ஆகியவையும் கூட, போக்குவரத்து நெரிசல் ஏற்பட மிக முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால்தான் ஆம்புலன்ஸ்கள் கூட நெரிசலில் சிக்கி கொள்ளும் அவல நிலை ஏற்படுகிறது.

இந்த சூழலில் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில், சமீபத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. பெரிய பஸ்கள் மற்றும் கார்கள் உள்பட அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் அங்கு நின்று கொண்டிருந்தன.

போதாக்குறைக்கு அந்த சாலை மிகவும் குறுகலாக வேறு இருந்தது. இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில்தான் அந்த ஆம்புலன்ஸ் அங்கு வந்து சிக்கி கொண்டது. அப்போது அங்கு பணியில் இருந்த ரஞ்சித் குமார் ராதாகிருஷ்ணன் என்ற போலீஸ்காரர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சற்றும் தாமதிக்காமல் சாலையின் மத்திய பகுதிக்கு ஓடி வந்த அவர், அங்கும் இங்கும் ஓடி பஸ்கள், கார்களை விலக்கி விட்டு, ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அவர் மற்ற வாகனங்களை எல்லாம் சாலை ஓரமாக விலக்கி விட விட, ஆம்புலன்ஸ் அவரை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தது.

இதன்மூலம் வெகு விரைவாக, போலீஸ்காரர் ரஞ்சித் குமார் ராதாகிருஷ்ணன், ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்து விட்டார். மிகவும் குறுகலான அந்த சாலையில், பெரிய அளவிலான வாகனங்கள் அதிகமாக இருந்த சூழலில், சமயோசிதமாக செயல்பட்ட அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து கொண்டுள்ளன.

ஆம்புலன்ஸின் டேஷ் போர்டு கேமராவில் இந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவாகியுள்ளன. தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலை தளங்களிலும், இந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி கொண்டுள்ளது.

அத்துடன் போலீஸ்காரர் ரஞ்சித் குமார் ராதாகிருஷ்ணனுக்கும், போலீஸ் உயரதிகாரிகள், நெட்டிசன்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டுள்ளன. அதே நேரத்தில் அந்த ஆம்புலன்ஸின் டிரைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஏனெனில் அவ்வளவு குறுகலான சாலையில், ஆம்புலன்ஸை மிகவும் லாவகமாக அவர் ஓட்டி சென்றார். சமூக வலை தளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
மேலே குறிப்பிடப்பட்டபடி போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்திய சாலைகளில், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்றவை சிக்கி கொள்வது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. சில சமயங்களில் இதர வாகன ஓட்டிகள் கூட, இத்தகைய அவசர கால வாகனங்களுக்கு வழி தர மறுத்து விடுகின்றனர்.

அப்படிப்பட்ட சூழலில் சமயோசிதமாக யோசித்து, மிக விரைவாக ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்த இளம் போலீஸ்காரர் ரஞ்சித் குமார் ராதாகிருஷ்ணன் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிஜ லிங்கப்பா என்பவரும், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, இதேபோல் பாராட்டுக்கள் மற்றும் பரிசுகளை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம், கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்றிருந்தார். பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனங்கள் புடைசூழ ராஜ்பவன் நோக்கி அவர் சென்று கொண்டிருந்தார்.

இதனால் வழிநெடுக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டடிருந்தது. ஆனால் அப்போது டிரைனிடி சர்க்கிள் என்ற பகுதியில், ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி, மேற்கொண்டு செல்ல முடியாமல் இருந்தது.

இதனை கவனித்த சப் இன்ஸ்பெக்டர் நிஜ லிங்கப்பா, மிகவும் தைரியமாக ஜனாதிபதியின் கான்வாயை தடுத்து நிறுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் வைரலாக, நிஜ லிங்காப்பாவிற்கு பாராட்டுக்களும், பரிசுகளும் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வாகன ஓட்டிகள் அனைவரும் இப்படி பொறுப்பை தங்கள் கையில் எடுத்து கொண்டு, போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளும், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்றவற்றுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க தாங்களாக முன்வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்றவை பலரின் உயிரை காக்க போராடுகின்றன. சாலைகளில் அந்த வாகனங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் யாரேனும் ஒருவரின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வாகன ஓட்டிகள் ஒரு சிலர், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்றவற்றை பின்தொடர்ந்து பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலில் இருந்து எளிதாக வெளியேறி விடலாம் என்பதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

அதாவது ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு பின்னால், அவற்றை ஓட்டியே அவர்களும் பயணம் செய்வார்கள். ஆனால் இது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இதுவும் கூட சாலை விபத்துக்களுக்கு காரணமாக அமைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி சாலையில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்றவை போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டிருப்பதை காண நேரிட்டால், உடனடியாக அவற்றுக்கு வழி ஏற்படுத்த கொடுப்பதற்கான முயற்சிகளை சற்றும் தாமதிக்காமல் மேற்கொள்ளுங்கள்.

ஏனெனில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களின் அவசர தேவை, ஒரு வேளை நாளை, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கோ தேவைப்படக்கூடிய நிலை ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications








