2 புதிய கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்க கியா திட்டம்!!
கியா ஸ்டோனிக் என்ற க்ராஸ்ஓவர் ரக காரும், கிராண்ட் கார்னிவல் என்ற எம்பிவி ரக கார் மாடலும் இப்போது பரிசீலனையில் உள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் இந்த இரண்டு மாடல்களுக்கும் பார்வையாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம்
2 புத்தம் புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு கியா மோட்டார்ஸ் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இந்த இரண்டு கார் மாடல்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கார் விற்பனையை துவங்குவதற்கான முயற்சிகளில் படுதீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் எஸ்பி எஸ்யூவி கான்செப்ட் உள்ளிட்ட பல புதிய மாடல்களை முன்னோட்டமாக காட்சிப்படுத்தி இருந்தது.

அடுத்த ஆண்டு முதல் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முதலாவதாக எஸ்யூவி மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ளது. எஸ்பி கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்படும் தயாரிப்பு நிலை எஸ்யூவி மாடல்தான் கியாவுக்கு முகவரி கொடுக்க வருகிறது.

இந்தநிலையில், கியா ஸ்டோனிக் என்ற க்ராஸ்ஓவர் ரக காரும், கிராண்ட் கார்னிவல் என்ற எம்பிவி ரக கார் மாடலும் இப்போது பரிசீலனையில் உள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் இந்த இரண்டு மாடல்களுக்கும் பார்வையாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்ததை உணர்ந்து கொண்டு கியா பரிசீலித்து வருகிறது

இதில், கியா ஸ்டோனிக் மாடலானது ஹூண்டாய் கோனா எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட க்ராஸ்ஓவர் ரக மாடல். கியா ஸ்டோனிக் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மில் மேலும் பல புதிய மாடல்களையும் அறிமுகம் செய்யவும் கியா திட்டமிட்டுள்ளது.

கியா ஸ்டோனிக் காரில் புலி மூக்கு பகுதி போன்ற க்ரில் பொருத்தப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்புக்கு இருபுறமும் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எல்இடி பகல்நேர விளக்குகள், சாய்வான ரூஃப்லைன், ரூஃப் ரெயில்கள், வலிமையான வீல் ஆர்ச்சுகள், அலாய் வீல்கள், பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் போன்றவை இந்த காரின் முக்கிய அம்சங்கள்.

கியா ஸ்டோனிக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

கியா கிராண்ட் கார்னிவல் எம்பிவி கார் மாடல் வட அமெரிக்க மார்க்கெட்டில் செடோனா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இது 5 கதவுகள் அமைப்புடைய எம்பிவி ரக கார் மாடல். இந்த எம்பிவி கார் 7 சீட்டர், 8 சீட்டர் மற்றும் 11 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. டியூவல் சன்ரூஃப், ஸ்டைலிங் கதவுகள், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி உள்ளிட்ட பல பிரிமியம் அம்சங்கள் உள்ளன.

இந்த எம்பிவி காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் அங்கு விற்பனை செய்யப்படுகிறது. 11 பேர் செல்வதற்கான மாடலானது இந்தியாவில் தனித்துவமான விஷயமாக இருக்கும்.

எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருப்பது அறிந்ததே. சரியான விலையில் இந்த இரண்டு மாடல்களையும் கியா களமிறக்கும்பட்சத்தில், நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது. குறிப்பாக, கிராண்ட் கார்னிவல் எம்பிவி காருக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








