சூரிய சக்தியில் இயங்கும் முதல் டிரைவர்லெஸ் பஸ்! கண்டுபிடித்தது யார் என தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்
சூரிய சக்தியில் இயங்க கூடிய முதல் டிரைவர்லெஸ் பஸ், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனை கண்டுபிடித்தது யார்? என தெரிந்தால், நீங்கள் நிச்சயமாக ஆச்சரியம் அடைவீர்கள்.
சூரிய சக்தியில் இயங்க கூடிய முதல் டிரைவர்லெஸ் பஸ், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனை கண்டுபிடித்தது யார்? என தெரிந்தால், நீங்கள் நிச்சயமாக ஆச்சரியம் அடைவீர்கள்.

பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவித்து கொண்டுள்ளன.

எனவே இவ்விரு பிரச்னைகளுக்கும், எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் தீர்வாக கருதப்படுகின்றன. இதன் காரணமாக, இந்தியா உள்பட உலகம் முழுக்க பல்வேறு நாடுகளும் வேக வேகமாக, எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வருகின்றன.

இந்த சூழலில், சூரிய சக்தியில் இயங்க கூடிய பஸ் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது டிரைவர்லெஸ் (Driverless) வகையை சேர்ந்தது என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். அதாவது டிரைவர் இல்லாமல், இந்த பஸ் தானாகவே இயங்கும்.

இந்திய சூழ்நிலைகளை மனதில் கொண்டு இந்த பஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு சுமார் 30 கிலோ மீட்டர்கள். சூரிய சக்தியில் இயங்க கூடிய இந்த டிரைவர்லெஸ் பேருந்தில், 10 முதல் 30 பேர் வரை பயணம் செய்யலாம்.

சூரிய சக்தியில் இயங்க கூடிய டிரைவர்லெஸ் பஸ் அறிமுகம் செய்யப்பட இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம் ஆகும். இதன் வணிக ரீதியிலான சேவைகள், அடுத்த ஆண்டு முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய தொழில் வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில், சூரிய சக்தியில் இயங்க கூடிய இந்த டிரைவர்லெஸ் பஸ்ஸை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

என்றாலும் தற்போது டிசைன் செய்யப்பட்டுள்ள அதன் முதல் முன்மாதிரி மாடலில், பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக பயணம் செய்யவுள்ளார். இந்நிகழ்வு வரும் 2019ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டி (Lovely Professional University) அமைந்துள்ளது. இங்கு இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பு நடத்தும் நிகழ்ச்சி ஒன்று, வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். இதில், பங்கேற்க வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று அழைத்து செல்ல, இந்த பஸ்ஸின் முதல் முன்மாதிரி மாடல் பயன்படுத்தப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

டீசலில் இயங்கும் பஸ்களை இயக்குவதற்கு ஆகும் செலவுகளை காட்டிலும், சூரிய சக்தியில் இயங்க கூடிய இந்த டிரைவர்லெஸ் பஸ்ஸை இயக்குவதற்கான செலவு மிக மிக குறைவு என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த பஸ்ஸை, லவ்லி புரொபஷனல் யுனிவர்சிட்டியை சேர்ந்த பல்வேறு துறைகளின் மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளனர். இதன் டிசைன் மற்றும் கட்டுமானம் என அனைத்தையும் முழுக்க முழுக்க அவர்களேதான் செய்துள்ளனர்.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் என பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் ஒருங்கிணைந்து, இந்த பஸ்ஸை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த பஸ் சுற்றுச்சூழலை ஒருபோதும் பாதிக்கவே பாதிக்காது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த பஸ்ஸை உருவாக்கிய மாணவர்களுக்கு, இந்தியா முழுவதும் இருந்து தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பஸ்ஸை உருவாக்கிய மாணவர்கள் கூறுகையில், ''இந்த பஸ்ஸை உருவாக்கியதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம்.

பிரதமர் மோடியை வரவேற்க இந்த பஸ் பயன்படுத்தப்பட இருப்பது கூடுதல் மகிழ்ச்சியை வழங்குகிறது. அவரின் நேரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனுமதித்தால், எங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள், அவரை இந்த பஸ்ஸில் ஒரு சிறிய சுற்றுலா அழைத்து செல்ல விரும்புகிறோம்'' என்றனர்.


Click it and Unblock the Notifications








