மேட்டுப்பாளையத்தில் ஒரே நேரத்தில் 4 மஹிந்திரா எஸ்201 எஸ்யூவிகள் சோதனை!!
மேட்டுப்பாளையத்தில் 4 மஹிந்திரா எஸ்201 எஸ்யூவிகள் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட பிரத்யேக படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
மேட்டுப்பாளையத்தில் 4 மஹிந்திரா எஸ்201 எஸ்யூவிகள் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களை எமது வாசகர் ஜித்தேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த படங்களையும், விரிவானத் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா நிறுவனம் விரைவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. மஹிந்திரா எஸ்-201 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியானது சாங்யாங் டிவோலி அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி அதன் அடிப்படையில் மேம்படுத்தும் பணிகளை மஹிந்திரா மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் மஹிந்திரா எஸ்-201 எஸ்யூவிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அப்போது எடுக்கப்பட்ட இந்த படங்களை எமது வாசகர் ஜித்தேஷ் ஜெகதீசன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதுவரை இந்த புதிய மஹிந்திரா எஸ்யூவி தனியாக அல்லது இரண்டு வேரியண்ட்டுகள் மட்டுமே ஒன்றாக சோதனை செய்யப்பட்டு வந்துள்ளன. இந்த நிலையில், ஒரே நேரத்தில் 4 மஹிந்திரா எஸ்-201 எஸ்யூவிகள் சோதனை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

மஹிந்திரா எஸ்-201 எஸ்யூவியின் அனைத்து வேரியண்ட்டுகளும் ஒரே நேரத்தில் வைத்து மஹிந்திரா சோதனை ஓட்டம் நடத்தி வருவதாக கருதப்படுகிறது. சோதனை ஓட்டத்தின்போது, மைலேஜ், எஞ்சின் இயக்கம் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்து, இந்த வேரியண்ட்டுகளுக்கு இடையே ஏற்படும் வித்தியாசத்தை ஆய்வு செய்வதற்காக ஒன்றாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

சோதனை ஓட்டத்தில் இருக்கும் 4 மஹிந்திரா எஸ்-201 எஸ்யூவிகளுமே அங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டுள்ளன. தயாரிப்பு நிலை மாடலுக்கு ஏற்ற வகையில், ஹெட்லைட்டுகள், டெயில் லைட்டுகள் இடம்பெற்றிருக்கிறது.

பேஸ் மாடல்களின் ஹெட்லைட்டில் ஹாலஜன் பல்புகளும், டாப் வேரியண்ட்டில் எல்இடி பல்புகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருப்பதையும் நீங்கள் படத்தில் காண முடியும்.

இந்த மாடலில் சற்றே சரிவான விண்ட்ஷீல்டு அமைப்பு, எல்இடி டெயில் லைட் க்களஸ்ட்டர், ஸ்டாப் லைட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ரூஃப் ரெயில்களும் பொருத்தப்பட்டுல்ளன. அனைத்து வேரியண்ட்டுகளிலுமே ஸ்டீல் சக்கரங்கள்தான் பொருத்தப்பட்டு இருந்தன. அலாய் வீல்கள் கொடுக்கப்படவில்லை.

இந்த எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் அண்மையில் வந்த மராஸ்ஸோ எம்பிவி காரில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. ஆனால், ட்யூனிங்கில் மாறுபடும்.

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பிரிமியம் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை டாப் வேரியண்ட்டில் முக்கிய அம்சங்களாக இருக்கும். சன்ரூஃப் கூட எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எஸ்யூவியில் இபிடி நுட்பத்துடன் செயல்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றிருக்கும். விலை உயர்ந்த மாடலில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் வியூ கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியான ரகத்தில் இந்த புதிய எஸ்யூவி மாடலை மஹிந்திரா நிலைநிறுத்த உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இந்த எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications