மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் பெயர் விபரம் கசிந்தது!!
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியான ரகத்தில் புதிய 7 சீட்டர் எம்பிவி ரக காரை மஹிந்திரா விரைவில் களமிறக்குகிறது. தற்போது இந்த கார் U321 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.
வரும் 31ந் தேதி மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், . அதன் விபரம் இப்போது கசிந்துள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியான ரகத்தில் புதிய 7 சீட்டர் எம்பிவி ரக காரை மஹிந்திரா விரைவில் களமிறக்குகிறது. தற்போது இந்த கார் U321 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இறுதிக் கட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த சூழலில், வரும் 31ந் தேதி இந்த புதிய எம்பிவி காரின் பெயரை அறிவிக்க இருப்பதாக மஹிந்திரா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், மஹிந்திராவின் புதிய எம்பிவி கார் மரஸ்ஸோ(Marazzo) என்ற பெயரில் வர இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

தேசிய ட்ரேட்மார்க் அலுவலகத்தில் மஹிந்திரா மராஸ்ஸோ என்ற பெயரும், லோகோவும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், மரஸ்ஸோ என்ற பெயரில் புதிய ட்விட்டர் கணக்கு துவங்கப்பட்டு யு321 தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டன.

ஆனால், அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால், அந்த ட்விட்டர் கணக்கு திடீரென அழிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், மஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் பெயர் கிட்டத்தட்ட மரஸ்ஸோ என்பது உறுதியாகி இருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக மஹிந்திரா கார்களின் பெயரில் முடிவடையும் எழுத்து ஆங்கிலத்தில் O என்ற உச்சரிப்புடன் முடிவடையும் வகையில் கொடுக்கப்படுகிறது. எனவே, மரஸ்ஸோ என்பது பொருத்தமாகவே பார்க்க முடியும். மரஸ்ஸோ என்பதற்கு மகிழ்ச்சியை கொடுப்பதற்காக பிறர சுமந்து செல்பவன் என்பது பொருளாக இருக்கிறது.

மஹிந்திராவின் புதிய மரஸ்ஸோ எம்பிவி கார் மூன்று வரிசை இருக்கை வசதியுடன் வருகிறது. 7 பேர் தாராளமாக பயணிக்கும்படி இருக்கும். மேலும், 7,8 மற்றும் 9 பேர் செல்வதற்கான இருக்கை அமைப்புகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் மோனோகாக் எனப்படும் ஒற்றை உடல்கூடு கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா- சாங்யாங் கூட்டணி இணைந்து உருவாக்கிய 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. பெட்ரோல் எஞ்சின் மாடலிலும் வருகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட இருக்கிறது.

இன்னோவா க்ரிஸ்ட்டாவுடன் போட்டி போடுவதற்கு ஏற்ப உட்புறத்தில் தரமான பாகங்கள் மற்றும் அதிக சிறப்பம்சங்களை இந்த எம்பிவி காரில் கொடுத்து வாடிக்கையாளர்களை மஹிந்திரா அசத்தும் என்று கருதப்படுகிறது.

ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மார்க்கெட்டையும், மாருதி எர்டிகா மார்க்கெட்டையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளும் ரகத்தில் நிலைநிறுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








