பாலைவனத்தில் வைத்து புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 சோதனை: ஸ்பை படங்கள்!!
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியில் வைத்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் விற்பனைக்கு வர இருப்பது தெரிந்ததே. இந்த எஸ்யூவி மஹிந்திரா எக்ஸ்யூவி700 என்ற பெயரில் வர இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி தற்போது மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான ஸ்பை படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியில் வைத்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. அங்க அடையாளங்கள் எதுவும் மறைக்கப்படாமல் இருந்த மாடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. பேட்ஜ் மட்டும் மறைக்கப்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி பிரிமியம் எஸ்யூவி ரகத்தில் நிலைநிறுத்தப்படும். டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் போன்ற பலமான போட்டியாளர்களுடன் நேருக்கு நேர் மோத இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவ700 எஸ்யூவி லேடர் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. 4,850மிமீ நீளம், 1,960மிமீ அகலம், 1,825மிமீ உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனரைவிட அதிக வீல் பேஸ் கொண்டதாக இருக்கும். எனவே, உட்புறத்தில் இடவசதி கூடுதலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வலிமையான சி பில்லர் அமைப்பு, பிரம்மாண்ட வீல் ஆர்ச்சுகள், கவர்ச்சிகரமான அலாய் சக்கரங்கள் மற்றும் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மொத்தத்தில் பிரம்மாண்டமாகவும், மிக நேர்த்தியாகவும் இருக்கின்றது.

உட்புறத்தில் உயர்தர நப்ப லெதர் கவர் கொண்ட இருக்கைகள், எலக்ட்ரிக் சன்ரூஃப்,க்ரூஸ் கன்ட்ரோல், ஜிபிஎஸ் நேவிகேஷன், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் போன்றவையும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் 9 ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், 360 டிகிரி கேமரா மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வர இருக்கிறது.

பிரிமியம் வசதிகள், அட்டகாசமான ஸ்டைல் போன்றவை இந்த காருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் வாய்ப்பு இருக்கிறது. போட்டியாளர்களை விட குறைவான விலை நிர்ணயித்தால், நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும்.
Source: 4x4 India


Click it and Unblock the Notifications








