அழகு பதுமை மர்லின் மன்றோ 7 ஆண்டுகளாக பயன்படுத்திய கார் ஏலம் விடப்படுகிறது.. சுவாரசிய தகவல்கள்
அழகு பதுமை மர்லின் மன்றோ சுமார் 7 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த கார் ஏலம் விடப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அழகு பதுமை மர்லின் மன்றோ சுமார் 7 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த கார் ஏலம் விடப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி நடிகையான மர்லின் மன்றோவை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. மர்லின் மன்றோவின் அழகில் கிறங்கி போன ரசிகர்கள் ஏராளம். இவரது நடை அழகும், உடை அழகும், உலகெங்கும் உள்ள ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் மிக பிரபலம்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மர்லின் மன்றோ, 1956 ஃபோர்டு தண்டர்பேர்டு (1956 Ford Thunderbird) கார் ஒன்றை வைத்திருந்தார். மர்லின் மன்றோ தனது 3வது திருமணத்திற்கு இந்த காரில்தான் பயணம் செய்தார். ஆம், மர்லின் மன்றோ 3 திருமணங்களை செய்து கொண்டவர்.

திருமணங்களும், விவகாரத்துகளும் மர்லின் மன்றோவின் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்தவை. கடந்த 1926ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி பிறந்தவரான மர்லின் மன்றோவுக்கு, ஜேம்ஸ் டோகர்ட்டி என்பவருடன், 1942ம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது.

ஆனால் அடுத்த 4 ஆண்டுகளில், அதாவது 1946ம் ஆண்டில், ஜேம்ஸ் டோகர்ட்டியை விவாகரத்து செய்து விட்டார் மர்லின் மன்றோ. இதன்பின் அமெரிக்க பேஸ்பால் வீரரான ஜோ டிமாகியோ என்பவருக்கும், மர்லின் மன்றோவுக்கும், கடந்த 1954ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது.

ஆனால் இந்த திருமண உறவு வெறும் ஓராண்டு காலம் மட்டுமே தாக்குபிடித்தது. 1955ம் ஆண்டிலேயே, ஜோ டிமாகியோவை விவாகரத்து செய்து விட்டார் மர்லின் மன்றோ. இதன்பின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஆர்தர் மில்லர் என்பவரை, 1956ம் ஆண்டில் மர்லின் மன்றோ மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

ஆர்தர் மில்லருடனான தனது 3வது திருமணத்திற்கு செல்ல மர்லின் மன்றோ பயன்படுத்திய கார்தான், 1956 ஃபோர்டு தண்டர்பேர்டு. மர்லின் மன்றோவின் இந்த கிளாசிக் கார், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், வரும் நவம்பர் 17ம் தேதி ஏலம் விடப்படுகிறது.

மர்லின் மன்றோவின் 1956 ஃபோர்டு தண்டர்பேர்டு கார், இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 டோர் வகையை சேர்ந்த இந்த கார், 1955ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி, தொழிற்சாலையில் இருந்து நேரடியாக வாங்கப்பட்டது. இதன் நிறம் கருப்பு.

மர்லின் மன்றோவின் நிறுவனமான மர்லின் மன்றோ புரொடக்ஸன்ஸ்தான், இந்த காரை வாங்கியது. ஆனால் மர்லின் மன்றோவின் தொழில் பார்ட்னரும், புகைப்பட கலைஞருமான மில்டன் க்ரீன் என்பவர்தான், இந்த காரை மர்லின் மன்றோவுக்கு, கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கினார் என நம்பப்படுகிறது.

1956 ஃபோர்டு தண்டர்பேர்டு காரை மர்லின் மன்றோ ஏறத்தாழ 7 ஆண்டுகள் வைத்திருந்தார். அதன்பின் அந்த காரை, இயக்குனர் லீ ஸ்ட்ராஸ்பெர்க் என்பவரின் மகன் ஜான் ஸ்ட்ராஸ்பெர்க்கிற்கு, பிறந்த நாள் பரிசாக கொடுத்து விட்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் மர்லின் மன்றோ உயிரிழந்து விட்டார்.

1962ம் ஆண்டில்தான் மர்லின் மன்றோ திடீரென உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 36 மட்டும்தான். தற்கொலை என அறிவிக்கப்பட்டாலும், மர்லின் மன்றோவின் திடீர் மரணம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் இன்றளவும் நீடித்து வருகின்றன.

முன்னதாக மர்லின் மன்றோவின் 1956 ஃபோர்டு தண்டர்பேர்டு கார் 225 ஹார்ஸ்பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 113 மைல்கள். இதன் இன்ஜின் ஒரு முறை மாற்றியமைக்கப்பட்டது. அன்று முதல் தற்போது வரை இந்த கார் 30,399 மைல்கள் ஓடியுள்ளது.
2018 ஃபோர்டு மஸ்டங் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications