புதிய மாருதி எர்டிகா கார் வருகை விபரம்!
புதிய மாருதி எர்டிகா கார் வருகை விபரம் வெளியாகி இருக்கிறது.
வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய தலைமுறைக்கு மாறியிருக்கும் மாருதி எர்டிகா காரின் வருகை விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் 7 சீட்டர் கார் கனவை சரியான பட்ஜெட்டில் நனவாக்கி தருகிறது மாருதி எர்டிகா கார். விற்பனையிலும் மிகச் சிறப்பான இடத்தை தக்க வைத்து வரும் மாருதி எர்டிகா காரை கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தி வருகிறது மாருதி.

கடந்த மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவிலேயே புதிய மாருதி எர்டிகா கார் பார்வைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை மாருதி பொய்யாக்கிவிட்டது.

இந்த சூழலில், வரும் ஆகஸ்ட் மாதம் புதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இரண்டாம் தலைமுறை மாடலாக வரும் புதிய மாருதி எர்டிகா காரின் நீள, அகலம் கூட்டப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, தற்போது நெருக்கடியாக இருக்கும் மூன்றாவது வரிசை இருக்கை சற்று சவுகரியமாக இருக்கும். அதேபோன்று, பொருட்கள் வைப்பதற்கான இடவசதியும் அதிகரிக்கப்பட்டு இருக்கும்.

புதிய மாருதி எர்டிகா காரின் முகப்பு மற்றும் பின்புற வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், பக்கவாட்டில் பெல்ட் லைன் புதிதாக மாற்றப்பட்டு இருப்பதுடன், புதிய அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

முன்புறம் சற்றே மேலே உயர்த்தப்பட்ட பானட் அமைப்பை பெற்றிருக்கும் என்பது கிடைத்திருக்கும் தகவல். கேபின் இடவசதி அதிகரிக்கப்பட்டு இருப்பதால், மிக சவுகரியமான உணர்வை தரும்.

புதிய மாருதி எர்டிகா காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தக்கவைக்கப்படும். டீசல் மாடலில் ஹைப்ரிட் தொழில்நுட்பமும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டீசல் மாடல் மிகச் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

மாருதி சியாஸ் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. அதேபோன்று, புதிய எர்டிகாவில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் வசதிகள், தரமான உட்புற பாகங்கள், அதிக இடவசதி, புதிய வடிவமைப்பு என முற்றிலும் புதிய மாடலாக மாருதி எர்டிகா கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த கார் பண்டிகை காலத்தில் கார் வாங்க காத்திருப்பவர்களுக்கு சிறந்த 7 சீட்டர் தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications








