மாருதி எர்டிகா லிமிடேட் எடிசன் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம்!!
மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் கூடுதல் அலங்கார பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடலில் வெளிப்புறத்தில் பல்வேறு கவர்ச்சிகர ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டுள்ளன. பனி விளக்குகள் அறையில் க்ரோம் அலங்கார பட்டை பொருத்தப்பட்டுள்ளது. புதிய அலாய் வீல்கள், க்ரோம் பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் ஆகியவை இதனை தனித்துவப்படுத்துகிறது.

புதிய மாருதி எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடலானது சில்க்கி சில்வர், சுப்பீரியர் ஒயிட் மற்றும் எக்கோசிட் மெரூன் ஆகிய புதிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

உட்புறத்திலும் கவர்ச்சிகர மற்றும் சொகுசு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் மர அலங்காரத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. லெதர் இருக்கைகள், லெதர் ஸ்டீயரிங் வீல் கவர் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

மற்றபடி அதிக மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த காரில் 1.4 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

டீசல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்ககும். டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

புதிய மாருதி எர்டிகா காரின் பெட்ரோல் லிமிடேட் எடிசன் மாடல் ரூ.7.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.9.41 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

மாருதி எர்டிகா காரின் புதிய தலைமுறை மாடல் அண்மையில் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஓரிரு மாதங்களில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், இருப்பு இருக்கும் எர்டிகா கார்களை வேகமாக விற்று தீர்க்கும் விதத்தில், இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








