புதிய மாருதி எர்டிகா கார் அரேனா ஷோரூம்கள் வழியாக விற்பனை!
ஏற்கனவே வந்த தகவல்களின்படி, மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக புதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வரும் 21ந் தேதி புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் மாருதியின் அரேனா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள்த தெரிவிக்கின்றன.

ஏற்கனவே வந்த தகவல்களின்படி, மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக புதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, மாருதியின் அரேனா ஷோரூம்கள் வாயிலாகவே புதிய மாருதி எர்டிகா கார் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மாருதியின் விலை உயர்ந்த மற்றும் பிரிமீயம் ரக கார்கள் நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், புதிய மாருதி எர்டிகாவும் நெக்ஸா வழியாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நெக்ஸா ஷோரூம்களைவிட அரேனோ ஷோரூம்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்க வாய்ப்பு கிடைக்கும்.

அத்துடன், விற்பனையிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை பெறும் வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவை மாருதி எடுத்துள்ளதாக தெரிகிறது. இது ஒரு விதத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். நெக்ஸா ஷோரூம்களைவிட அரேனா ஷோரூம்கள் அதிக அளவில் இருப்பதால், அருகாமையிலேயே விற்பனை, சர்வீஸ் உள்ளிட்ட வசதிகளை பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

அதேநேரத்தில், மாருதி அரேனா ஷோரூம்களிலும் வாடிக்கையாளர்கள் சிறந்த சேவை அனுபவத்தை பெற முடியும். மாருதி ஓர் சிறந்த முடிவை எடுத்துள்ளதாகவே வாடிக்கையாளர் மத்தியிலும் கருத்து நிலவுகிறது.

பழைய மாருதி எர்டிகா காரைவிட புதிய தலைமுறை மாடலாக வரும் புதிய எர்டிகா கார் அளவில் பெரிதாக மாறி இருக்கிறது. அத்துடந், வடிவமைப்பிலும் முற்றிலும் புதிய மாடலாக மாற்றப்பட்டு இருக்கிறது.

முகப்பில் புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்புடன் முகம் முற்றிலும் மாறிவிட்டது. பக்கவாட்டில் டி பில்லர் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு கூரை அமைப்பு தனியாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. பழைய எர்டிகாவில் பின்புற டெயில் லைட் க்ளஸ்ட்டர் காருடைய அளவுக்கு ஏற்றவாறு இல்லாமல் சிறியதாக இருப்பதாக ஒரு கருத்து இருந்தது. அதனை களையும் விதமாக புதிய எர்டிகா காரில் பெரிய அளவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. புதிய அலாய் வீல்கள் கவர்ச்சி சேர்க்கும்.

புதிய மாருதி எர்டிகா காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பிரிமீயமான அப்ஹோல்ஸ்ட்ரி உள்ளிட்ட எண்ணற்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. இடவசதியும் சற்றே மேம்படுத்தப்பட்டு ருக்கிறது.

புதிய மாருதி எர்டிகா காரில் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் சுஸுகியின் எஸ்எச்விஎஸ் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103.5 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் அல்லத ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்யலாம்.

புதிய தலைமுறை மாருதி எர்டிகா காரின் டீசல் எஞ்சினில் மாற்றம் இல்லை. அதே 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 88.7 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறனுடையதாக இருக்கும். டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே வருகிறது. மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் இடம்பெறுகிறது.

புதிய தலைமுறை மாருதி எர்டிகா காரில் டூயல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் நிரந்தர பாதுகாப்பு வசதிகளாக இருக்கும். உயர் வேரியண்ட்டில் கூடுதல் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளை மாருதி அளிக்கும்.

தற்போது விற்பனையில் உள்ள மாடலைவிட அதிக பிரிமீயம் அம்சங்கள் கொண்ட மாடலாக வருவதால் விலையும் கூடுதலாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கொடுக்கம் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக இந்த கார் நிலைநிறுத்தப்படும் என்பதால், தொடர்ந்து வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக தன்னை தக்க வைத்துக் கொள்ளும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








