வேன் வரும் பின்னே.. பைக் வரும் முன்னே.. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் மாருதி சுஸூகி..
பைக்கில் சென்று வாடிக்கையாளர்களின் கார்களை சரி செய்யும் சேவையை மாருதி சுஸூகி நிறுவனம் தொடங்கியுள்ளது. இப்படி ஒரு சேவையை வழங்கும் முதல் நிறுவனம் மாருதி சுஸூகிதான்.
பைக்கில் சென்று வாடிக்கையாளர்களின் கார்களை சரி செய்யும் சேவையை மாருதி சுஸூகி நிறுவனம் தொடங்கியுள்ளது. இப்படி ஒரு சேவையை வழங்கும் முதல் நிறுவனம் மாருதி சுஸூகிதான். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று மாருதி சுஸூகி. காரை வெறுமனே விற்பனை செய்வதுடன் நின்று விடாமல், காரை விற்பனை செய்த பிறகும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சர்வீஸை, மாருதி சுஸூகி நிறுவனம் வழங்கி வருகிறது.

Roadside Assistance எனப்படும் சேவையையும் மாருதி சுஸூகி நிறுவனம் வழங்கி வருகிறது. இதன்படி வாடிக்கையாளர்களின் கார்களில், நடுவழியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், மாருதி சுஸூகி நிறுவன டெக்னீஷியன்கள், சம்பவ இடத்திற்கே சென்று, காரை சரி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.

இந்த பணியில், 415 வேன்களை மாருதி சுஸூகி நிறுவனம் ஈடுபடுத்தி வருகிறது. தற்போது அதற்கு பதிலாக, பைக்குகளில் சென்று, வாடிக்கையாளர்களின் காரை சரி செய்து தரும் புதிய திட்டத்தை மாருதி சுஸூகி நிறுவனம் தொடங்கியுள்ளது.

இதுவரை வேறு எந்த கார் நிறுவனமும் இப்படி ஒரு சேவையை வழங்கியது இல்லை. மாருதி சுஸூகி நிறுவனம்தான் முதல் முறையாக வாடிக்கையாளர்களுக்கு, இப்படியான ஒரு சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 251 நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டுக்குள்ளாக, இந்த சேவையை 500 நகரங்களுக்கு விரிவுபடுத்த மாருதி சுஸூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த பணியில், 350 பைக்குகள் ஈடுபடுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் பைக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில், வேன் மூலமாக சென்றால், வாடிக்கையாளர்களின் இடத்தை அடைய காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத சிரமமும், பதற்றமும் ஏற்படுகிறது.

எனவே பைக்குகளில் சென்றால், வாடிக்கையாளர்களின் இடத்தை வேகமாக அடைய முடியும். இதனால்தான் இந்த புதிய பைக் சேவை தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களது காரின் பிரச்னையை சரி செய்ய, நன்கு அனுபவம் வாய்ந்த டெக்னீஷியன்கள்தான் வருவார்கள்.

அத்துடன் அவர்கள் பயணிக்கும் பைக்குகளில், தேவையான அனைத்து ஸ்பேர் பார்ட்ஸ்களும் இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், Roadside Assistance உதவி கேட்டு, ஆப் மூலமாக வேண்டுகோள் விடுக்கலாம்.

உடனடியாக அருகில் உள்ள டெக்னீசியன் சம்பவ இடத்திற்கு வருவார். வாடிக்கையாளரும், டெக்னீசியனும் போன் மூலமாக தொடர்பு கொள்ளவும் முடியும். டெக்னீசியன் எப்போது வருவார்? என்ற நேரத்தை, அந்த ஆப் மூலமாக, வாடிக்கையாளர்கள் டிராக் செய்து கொள்ளவும் முடியும்.

வாடிக்கையாளர்களின் காருக்கான வாரண்டி காலம் முடிந்திருந்தால், விசிட்டிங் சார்ஜாக ரூ.420 முதல் ரூ.575 வரை வசூலிக்கப்படும். விசிட்டிங் சார்ஜ், இடத்தை பொறுத்து மாறுபடும். மாருதி சுஸூகி நிறுவனத்தின் இந்த புதிய சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








