நுகர்வோர் கோர்ட்டில் வசமாக சிக்கி கொண்ட மாருதி.. ஸ்விப்ட் வாடிக்கையாளருக்கு 50 ஆயிரம் வழங்க உத்தரவு
ஸ்விப்ட் கார் வாடிக்கையாளருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், பழுதான அவரது காரை இலவசமாக சரி செய்து தர வேண்டும் எனவும், மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்விப்ட் கார் வாடிக்கையாளருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், பழுதான அவரது காரை இலவசமாக சரி செய்து தர வேண்டும் எனவும், மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குஜராத் மாநிலம் போர்பந்தர் பகுதியை சேர்ந்தவர் நலின்பாய் கனானி. கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம், மாருதி ஸ்விப்ட் கார் ஒன்றை நலின்பாய் கனானி வாங்கினார். பின்னர் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம், ராஜ்கோட்-ஜாம்நகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவரது கார் நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் அந்த கார், கம்பெனியின் ஒர்க்ஸாப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த சமயத்தில் நலின்பாய் கனானியின் கார், 17 ஆயிரம் கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓடியிருந்தது.

அதாவது நலின்பாய் கனானியின் கார் வாரண்டி காலத்தின் கீழ் இருந்தது. ஆனால் அவரது கார் இலவசமாக பழுது நீக்கி தரப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே போர்பந்தர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில், நலின்பாய் கனானி வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், நலின்பாய் கனானிக்கு புதிய கார் வழங்க வேண்டும் அல்லது அவர் காரை வாங்க செலுத்திய தொகையான ரூ.5.41 லட்சத்தை திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதுதவிர வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியமைக்காக ரூ.3 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து, குஜராத் மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில், மாருதி நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அப்போது டிரைவரின் கவனக்குறைவு காரணமாக, அந்த கார் மிகப்பெரிய அளவிலான விபத்தில் சிக்கியதாக, மாருதி நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால் கார் விபத்தில் சிக்கியது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அத்துடன் நலின்பாய் கனானிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கும்படி, மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் நலின்பாய் கனானியின் காரில் உள்ள குறைபாடான பகுதிகளை, இலவசமாக மாற்றி தர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக கார் ரிப்பேர் ஆன 2012ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து, அந்த காரை பயன்படுத்தவில்லை என நலின்பாய் கனானி கூறியிருந்தார்.

எனவே வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள், அந்த காரை சரி செய்து, நலின்பாய் கனானி வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனினும் குஜராத் மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம், தண்டனையை குறைத்துள்ளது என்றே கூறலாம்.

ஏனெனில் போர்பந்தரில் உள்ள கீழ் நீதிமன்றமானது, புதிய கார் வழங்க வேண்டும் அல்லது கார் வாங்க செலுத்திய தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் குஜராத் மாநில நுகர்வோர் நீதிமன்றமானது, ரூ.50 ஆயிரம் வழங்குவதுடன், காரை சரி செய்து தர மட்டுமே உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications