சக்திவாய்ந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் கார் இந்திய வருகை விபரம்!
சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் மாடல் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் மாடல் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வருகை விபரம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் அதிக செயல்திறன் கொண்ட பெர்ஃபார்மென்ஸ் ரக ஹேட்ச்பேக் ரக கார்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரித்து வருகிறது. மாருதி பலேனோ ஆர்எஸ் மாடல் முன்னிலை வகிக்கும் நிலையில், மிக சவாலான விலையில் டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதனால், இந்த ரகத்தில் சந்தைப்போட்டி அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இந்தியர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஹேட்ச்பேக் கார் மாடல் என்ற பெருமையை தக்க வைத்து வரும் மாருதி ஸ்விஃப்ட் காரின் செயல்திறன் மிக்க மாடல் விரைவில் இந்தியா கொண்டு வரப்பட இருக்கிறது.

கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த புதிய மாடலை வரும் மார்ச் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் மாடலில் புதிய பம்பர் அமைப்பு, சைடு ஸ்கர்ட்டுகள், ரூஃப் ஸ்பாய்லர் உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீகளுடன் ராலி ரேஸ் கார்கள் போன்று கவர்ச்சிகரமான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கும்.

உட்புறத்திலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த கார் வர இருக்கிறது. முழுவதுமான கருப்பு வண்ண இன்டீரியர் அமைப்பு, அலுமினியம் பெடல்கள், ஆர்எஸ் பேட்ஜ் பொறிக்கப்பட்ட இருக்கை உறைகள், விசேஷ மிதியடிகள் உள்ளிட்டவற்றுடன் வருகிறது.

மாருதி பலேனோ ஆர்எஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கும். பெரிய அலாய் வீல்கள் காரின் தோற்றத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் அம்சமாக இருப்பதுடன் சாதாரண மாடலிலிருந்து தனித்துவப்படுத்தும்.

அதிக சக்திவாய்ந்த இந்த எஞ்சினுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், இந்த காரின் சஸ்பென்ஷனும் அதிக இறுக்கமானதாக ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். இதனால், கையாளுமையில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டதாக இருக்கும்.

சாதாரண மாடலைவிட விலை அதிகமாக நிர்ணயிக்கப்படும். துள்ளலான தோற்றம், பவர்ஃபுல் எஞ்சின், கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய மாருதி ஸ்விஃப்ட் ஆர்எஸ் மாடல் இளம் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும். ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி, ஃபியட் அபார்த் புன்ட்டோ, டாடா டியாகோ ஜேடிபி போன்ற மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications