அதே விலையில் புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் ஸ்பெஷல் எடிசன்!!
பண்டிகை காலத்தை முன்னிட்டு, புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் LXi மற்றும் LDi ஆகிய பெட்ரோல், டீசல் மாடல்களின் பேஸ் வேரியண்ட்டுகளில் கூடுதல் ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டு ஸ்பெஷல் மாடலாக வந்துள்ளது. பாடி கலர்
பண்டிகை காலத்தை முன்னிட்டு, மாருதி ஸ்விஃப்ட் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் LXi மற்றும் LDi ஆகிய பெட்ரோல், டீசல் மாடல்களின் பேஸ் வேரியண்ட்டுகளில் அதிக வசதிகள் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டு ஸ்பெஷல் எடிசன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் காரின் பேஸ் மாடலில் கருப்பு வண்ண சைடு மிரர்கள் மற்றும் கைப்பிடிகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் பாடி கலர் சைடு மிரர்கள், கதவு கைப்பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு வண்ண வீல் கவர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பேஸ் மாடலில் மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்படாமல் அந்த இடம் காலியாகவே வரும். ஆனால், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் சிங்கிள் டின் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புற கதவுகளுக்கு பவர் விண்டோஸ் வசதி, சென்ட்ரல் லாக்கிங் வசதி மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கூடுதல் வசதிகள் டீலர் அளவில் செய்து கொடுக்கப்பட இருக்கின்றன. இவற்றிற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இவற்றை தற்போது கட்டணமில்லாமல் அதே விலையில் மாருதி கார் நிறுவனத்தின் டீலர்கள் செய்து கொடுக்க உள்ளனர். இது நிச்சயம் கூடுதல் மதிப்பு தரும் விஷயமாகவே பார்க்க முடியும்.

ஏனெனில், கடந்த பிப்ரவரி மாதம் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ.4.99 லட்சம் என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் பேஸ் மாடல் விற்பனைக்கு வந்தது. தற்போது அதே விலையில், இந்த கூடுதல் ஆக்சஸெரீகளுடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் ஃபியட் 1.3 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

இந்திய வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக மாருதி ஸ்விஃப்ட் விளங்குகிறது. இந்த நிலையில், மிக குறைவான பட்ஜெட்டில் அதிக சிறப்பம்சங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் நிச்சயம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது.

அடிப்படை வசதிகள் சேர்க்கப்பட்டு இருப்பதுடன் அதே ஆரம்ப விலையில் வந்திருப்பது நிச்சயம் பண்டிகை காலத்தில் கார் வாங்க இருப்பவர்களுக்கு சரியான சாய்ஸாக இருக்கும் என்று நம்பலாம். இதன்மூலமாக, வரும் மாதங்களில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications