மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் ஆல் டெரைன் மாடல் விற்பனைக்கு வந்தது!!
மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் ஆல் டெரைன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலைவிட இந்த இ க்ளாஸ் ஆல் டெரைன் மாடலானது 35 மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்
ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த, புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் ஆல் டெரைன் மாடல் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையான சொகுசு கார் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் என்பது தெரிந்ததே. பணக்காரர்களின் முதல் தேர்வாக இருக்கும் இந்த மாடலானது இ க்ளாஸ் செடான், லாங் வீல் பேஸ் மற்றும் சக்திவாய்ந்த ஏஎம்ஜி ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கிறது. இந்த நிலையில், எஸ்யூவி போன்று ஆஃப்ரோடிலும் பயன்படுத்தக்கூடிய, இ க்ளாஸ் காரின் ஆல் டெரைன் மாடலும் இந்தியா வந்துள்ளது.

இ க்ளாஸ் காரின் எஸ்யூவி மாடலாகவே இதனை கூற முடியும். வடிவமைப்பு, தகவமைப்புகள் அவ்வாறு உள்ளன. சொகுசு செடான் கார்களில் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாக இருக்கும். எனவே, மோசமான சாலைகளில் கவனமாக கையாள வேண்டி இருக்கும்.

ஆனால், சாதாரண மாடலைவிட இந்த இ க்ளாஸ் ஆல் டெரைன் மாடலானது 35 மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிறது. சக்கரங்கள் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 20 அங்குல சக்கரங்களும் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றன. இதனால், ஆஃப்ரோடு சாகசங்களிலும் பின்னி எடுக்கும்.

முன்புற தோற்றம் பிரம்மாண்டமாக இருக்கிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புற பம்பரில் எஸ்யூவி மாடல்களை போல ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாடி கிளாடிங் சட்டங்கள், பிரம்மாணம்டமான வீல் ஆர்ச்சுகளுடன் வசீகரிக்கிறது. இந்த காரின் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், பம்பரில் ஸ்கிட் பிளேட் மற்றும் இரட்டை சைலென்சர் அமைப்புகள் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரைவிட இந்த மாடலானது நீளத்தில் 116மிமீ குறைவாக இருக்கிறது. வீல் பேஸ் கூட 158 மிமீ மட்டுமே. ஆனால், உடல் அமைப்பு நீளமாக இருப்பதால், காரின் உட்புற இடவசதி சிறப்பாக இருக்கிறது. இந்த காரில் 640 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி உள்ளது. பின் இருக்கையை மடக்கினால், 1,820 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதியை பெறலாம்.

இந்த காரில் ஏர் பாடி கன்ட்ரோல் மல்டி சேம்பர் அமைப்பில் செயல்படும் ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண மற்றும் ஆஃப்ரோடு சாலைகளில் இயக்குவதற்கு தக்கவாறு டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய இ க்ளாஸ் ஆல் டெரைன் மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 194 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 8 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக 231 கிமீ வேகம் வரை செல்லும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. 5 விதமான டிரைவிங் மோடுகளும் உள்ளன. இதில், ஆஃப்ரோடுக்கான விசேஷ டிரைவிங் மோடு ஆப்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரின் உட்புறமானது சாதாரண இ க்ளாஸ் காரை ஒத்துள்ளது. கமாண்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரிலும் இடம்பெற்றிருக்கிறது. பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் ஆல் டெரைன் கார் ரூ.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது நேரடி போட்டியாளர்கள் இல்லை. இது தனித்ததுவமான தேர்வாக வாடிக்கையாளர்களுக்கு இருக்கும்.


Click it and Unblock the Notifications