எம்ஜி மோட்டார்ஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகமாகிறது
இந்தியாவில் முதலாவதாக புதிய எஸ்யூவியை எம்ஜி மோட்டார்ஸ் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கால் பதிப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

அடுத்த ஆண்டு இந்தியாவில் தனது முதல் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், முதல் மாடலாக புத்தம் புதிய எஸ்யூவியை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு எம்ஜி மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் அல்லது ஜிஎஸ் ஆகிய இரு மாடல்களில் ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறி வந்தன. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, புத்தம் புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே எம்ஜி நிறுவனத்திடம் உள்ள எஸ்யூவி மாடல்களின் அடிப்படையில்தான் இந்த புதிய எஸ்யூவி மாடலும் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி மாடல் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட எஸ்யூவி கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து களமிறக்கப்பட உள்ளது.

2020முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பொருத்துவது கட்டாயமாக்கப்பட இருப்பதால், புதிய எம்ஜி எஸ்யூவி காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் பொருத்தப்பட்டு வரும்.

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஜீப் காம்பஸ் போன்ற வலிமையான போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை இந்த புதிய எஸ்யூவி பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான SAIC நிறுவனம் குஜராத் மாநிலம் ஹலோல் நகரில் உள்ள செவர்லே ஆலையை கையகப்படுத்தி, அதனை மேம்படுத்தும் பணிகளை துவங்கிவிட்டது. எனவே, உற்பத்தி துவங்குவதற்கு ஏதுவான சூழலும் விரைவில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துவிடும்.

அத்துடன், 80 சதவீத உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே பெறுவதற்கு எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதனால், போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

இதனிடையே, டீலர்களை நியமிப்பதற்கான முயற்சிகளிலும் எம்ஜி மோட்டார்ஸ் தீவிரமாக இறங்கி இருக்கிறது. வரும் 28ந் தேதி மும்பையில் இதற்கான நிகழ்ச்சிக்கும் அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, நாட்டின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறது.


Click it and Unblock the Notifications








