ரூ.40 கோடி விலையில் புதிய ஹைப்பர் காரை அறிமுகப்படுத்திய புகாட்டி!!
புகாட்டி டிவோ என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. உலக அளவில் மொத்தமே 40 கார்கள் மட்டுமே லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. புகாட்டி சிரோன் காரை வாங்கிய வாடிக்கையாள
ஹைப்பர் கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் புகாட்டி நிறுவனம் புதிய ஹைப்பர் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹைப்பர் காரின் சிறப்புகள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புகாட்டி டிவோ என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. உலக அளவில் மொத்தமே 40 கார்கள் மட்டுமே லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. புகாட்டி சிரோன் காரை வாங்கிய வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த காரை வாங்குவதற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புகாட்டி கிரான் டூரிஷ்மோ கான்செப்ட் கார் மாடலில் இருந்து டிசைன் தாத்பரியங்கள் இந்த கார் வடிவமைப்பில் கையாளப்பட்டுள்ளன. இந்த கார் வேரான், சிரோன் காரிலிருந்து தனித்துவப்படுத்தும் விதத்தில், டிசைனில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முகப்பில் பெரிய ஏர் இன்டேக் பகுதிகள் முன்புறத்தை ஆக்கிரமித்துள்ளன. சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தாத்பரியத்தில் பம்பர், க்ரில் அமைப்புகள் டிஃபியூசர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த காரில் ஆன்டி ரோல்பார்கள் மற்றும் கடினமான ஷாக் அப்சார்பர் ஸ்பிரிங்குகள் இருப்பதால், சிறப்பான நிலைத்தன்மையை வழங்கும். அதிகபட்ச வேகத்தில் இந்த கார் செல்லும்போது 456 கிலோ டவுன்ஃபோர்ஸை பெறும் அம்சங்களை பெற்றிருக்கிறது. இது சிரோன் காரைவிட 90 கிலோ அதிகம்.

இதன் மிக சக்திவாய்ந்த எஞ்சினை குளிர்விப்பதற்காக பல்வேறு சிறப்பு குளிர்விப்பு அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், கூரையிலும் ஒரு காற்று குளிர்விப்பு அமைப்பு இருப்பது இதன் முக்கிய அம்சம்.

பந்தய களங்களிலும், சாதாரண சாலைகளிலும் பயன்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களையும் இந்த கார் பெற்றிருக்கிறது. கார்பன் ஃபைபர் வைப்பர் பிளேடுகள், இலகுவான ஆடியோ சிஸ்டம், இலகுவான சக்கரங்கள் என்று பல்வேறு விசேஷ பாகங்கள் பொருத்தப்பட்டிருப்பதால், புகாட்டி சிரோன் காரைவிட எடை குறைவானது.

புகாட்டி சிரோன் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே W16 சிலிண்டர் அமைப்புடைய 8.0 லிட்டர் எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 1479 பிஎச்பி பவரை வாரி இறைக்கும் வல்லமையை வாய்ந்தது. 0 - 100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 2.4 வினாடிகளில் எட்டிவிடும்.

புகாட்டி சிரோன் காரைவிட விலை இரு மடங்கு அதிகம். ஆனால், இதன் டாப் ஸ்பீடு சிரோன் காரைவிட குறைவு. ஆம், இந்த கார் 380 கிமீ வேகம் வரை தொட வல்லது என்று புகாட்டி தெரிவித்துள்ளது. புகாட்டி சிரோன் காரைவிட சிறப்பான அம்சங்களுடன் இந்த கார் வந்திருக்கிறது.

இந்திய மதிப்பில் ரூ.41 கோடி விலை மதிப்பு கொண்டது. மொத்தம் 40 கார்களுக்கும் ஏற்கனவே பணத்தை கொடுத்து வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








