புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் இந்திய வருகை பற்றிய விபரம்!!
இந்திய ஆஃப்ரோடு பிரியர்கள் நெஞ்சில் தனி இடம் பிடித்திருக்கும் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் இந்தியா வர இருக்கிறது.
புதிய தலைமுறை அம்சங்களுடன் மாற்றம் கண்டுள்ள புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி இந்திய வருகை குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது. அதனை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய மார்க்கெட்டில் சத்தமில்லாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த மிட்சுபிஷி கார் நிறுவனம் புதிய மாடல்களுடன் இந்திய வாடிக்கையாளர்களை வளைக்க தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் அவுட்லேண்டர் எஸ்யூவியை அறிமுகம் செய்த அந்த நிறுவனம் அடுத்து எக்ஸ்பேண்டர் உள்ளிட்ட புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய ஆஃப்ரோடு பிரியர்கள் நெஞ்சில் தனி இடம் பிடித்திருக்கும் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் இந்தியா வர இருக்கிறது. மூன்றாம் தலைமுறை மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மூன்றாம் தலைமுறை மிட்சுபிஷி ஏற்கனவே பல்வேறு நாடுகளில் விற்பனையில் உள்ளது. இந்த மாடலை அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்ய மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் டிசைன் மிக வசீகரமாக மாற்றப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் வசீகரமான ஹெட்லைட் வடிவமைப்பு, பெரிய க்ரில் அமைப்பு, வலிமையான பம்பர் உள்ளிட்டவற்றுடன் மிக பிரம்மாண்டமாக தோற்றமளிக்கிறது. பக்கவாட்டிலும், பின்புறத்திலும் தனித்துவமான டிசைனுடன் கவர்கிறது.

உட்புறம் மிக பிரியமாகவும், தரமான பாகங்களுடன் மிளிர்கிறது. இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, லெதர் இருக்கைகள், 7 ஏர்பேக்குகள், 360 கேமரா, எலக்ட்ரானிக் ஹேண்ட்பிரேக் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியில் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் பாரத் ஸ்டேஜ் - 6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும்.

ஆஃப்ரோடு பிரியர்களின் சாய்ஸில் இருக்கும் இந்த எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதேபோன்று, ஆஃப்ரோடு சாகசங்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளுடன் வர இருக்கிறது.

புதிய பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யவும் மிட்சுபிஷி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, விலையை மிக சரியாக நிர்ணயிக்கும் வாய்ப்பை அந்நிறுவனம் பெற முடியும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் போன்ற பிரிமியம் ரக எஸ்யூவி மாடல்களுடன் இது போட்டி போடும். ரூ. 34 லட்சம் முதல் ரூ.37 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் தற்போது கிடைக்கிறது. புதிய தலைமுறை மாடல் இதனை விட சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications