புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு சிறப்பான முன்பதிவு... காத்திருப்பு காலமும் நீள்கிறது!
தற்போதைய நிலவரப்படி, புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு 38,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை 2.11 லட்சம் பேர் வாங்குவதற்காக டீலர்களில் விசாரணை செய்துள்ளனர். அதில், பலர் கூடிய விரைவில் முன்பதிவு செ
புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு முன்பதிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், காத்திருப்பு காலமும் வெகுவாக நீண்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் எதிர்பார்த்தபடியே, வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் சிறந்த பட்ஜெட் மாடலாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பேராதரவை கொடுத்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு 38,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை 2.11 லட்சம் பேர் வாங்குவதற்காக டீலர்களில் விசாரணை செய்துள்ளனர். அதில், பலர் கூடிய விரைவில் முன்பதிவு செய்வார்கள் என்பதால், முன்பதிவு தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு அதிகரித்துள்ளதால், வேரியண்ட்டுக்கு தக்கவாறு புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கான காத்திருப்பு காலம் 4 மாதங்கள் வரை நீள்கிறது. இந்த நிலையில், முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு மிக விரைவாக டெலிவிரி கொடுக்கும் விதத்தில், உற்பத்தியை அதிகரிக்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

அதன்படி, தற்போது மாதத்திற்கு 7,500 கார்கள் என்ற உற்பத்தி இலக்கை மாதத்திற்கு 10,000 என்ற அளவில் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், முன்பதிவு செய்தவர்களுக்கு முடிந்தவரை 2 மாதங்களுக்குள் டெலிவரி கிடைத்துவிடும் வாய்ப்பு ஏற்படும்.

ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் புதிய சான்ட்ரோ கார் வாடிக்கையாளர்களை கவரும் தோற்றத்தை பெற்றிருக்கிறது. இந்த ரக கார்களில் மிகச் சிறப்பான கேபின் இடவசதியை ஹூண்டாய் சான்ட்ரோ கார் அளிக்கிறது.

இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா, ஸ்பீடு சென்சிங் டோர் லாக் மற்றும் விபத்தின்போது கதவுகள் தானாக திறக்கும் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் இருக்கும் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமல்லாது, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைப்பதும் இந்த காரின் மதிப்பை கூட்டும் விஷயம்.

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 3.0.5 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையில் சிறப்பான மைலேஜாக இருக்கும். 7 விதமான வண்ணத் தேர்வுகளில் வருகிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது. டாடா டியாகோ காருக்கு மிக நேரடியான போட்டியாக பார்க்கப்படுகிறது. மறைமுகமாக பல பட்ஜெட் கார் மாடல்களுக்கு போட்டியை தருகிறது.


Click it and Unblock the Notifications