விபத்தில் சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார்... அதான்யா மாருதி!!
கேரளாவில், டெலிவிரி கொடுப்பதற்காக எடுத்து வந்த மாருதி டிசையர் கார் விபத்தில் சிக்கி சேதமடைந்ததால், புதிய கார் தருவதாக டீலர் கூறியிருப்பது வாடிக்கையாளரை நெகிழ செய்துள்ளது.
கேரளாவில், டெலிவிரி கொடுப்பதற்காக எடுத்து வந்த மாருதி டிசையர் கார் விபத்தில் சிக்கி சேதமடைந்ததால், புதிய கார் தருவதாக டீலர் கூறியிருப்பது வாடிக்கையாளரை நெகிழ செய்துள்ளது.

கேரளாவை சேர்ந்த ஆஷிஷ் மேனன் என்பவர் மாருதி டிசையர் கார் விபத்தில் சிக்கியது குறித்து சில படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். அதில், வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுப்பதற்காக யார்டில் இருந்து ஷோரூமுக்கு எடுத்து வந்த புதிய மாருதி டிசையர் கார் விபத்தில் சிக்கியதாக குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.

அதிவேகமாக வந்த ஆட்டோரிக்ஷ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மழை பெய்ததால் போதிய பார்வை திறன் இல்லாத சமயத்தில் காரும், ஆட்டோ ரிக்ஷாவும் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விபத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் கீழே விழுந்து காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால், காரை ஓட்டி வந்த டீலரை சேர்ந்த ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டார்.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. முன் பக்க பேனல்கள், அச்சு முறிந்து போனதுடன் வலது பக்க முன்சக்கரம் தனியாக கழன்றுள்ளது. இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த டீலர் ஓட்டுனர் மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காரை டெலிவிரி எடுப்பதற்காக காத்திருந்த உரிமையாளர் இந்த சம்பவம் குறித்து கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். எனினும், டீலரை சேர்ந்தவர்கள் வாடிக்கையாளரை சமாதானப்படுத்தி இருக்கின்றனர்.

அத்துடன், விபத்தில் சிக்கிய காருக்கு பதிலாக புதிய காரை டெலிவிரி தருவதாகவும் உறுதி அளித்தனர். இதனால், வாடிக்கையாளர் சமாதானம் அடைந்ததுடன், விபத்தில் சிக்கிய காரையே டெலிவிரி தருவேன் என்று பிடிவாதம் இல்லாமல் புதிய காரை தருவதாக சொன்ன டீலரை வாடிக்கையாளர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

பொதுவாக, சில டீலர்களில் இதுபோன்ற பிரச்னைகள் வரும்போது பெரும் பிரளயமே நடக்கும். சில டீலர்களில் டெஸ்ட் டிரைவ் கார்களை புதிது போல பாலிஷ் செய்து டெலிவிரி கொடுப்பது குறித்தெல்லாம் செய்திகள் வருவது வழக்கமாக இருக்கிறது.

ஆனால், விபத்தில் சிக்கி சேதமடைந்த காருக்கு எந்த பேரமும் பேசாமல் உடனடியாக புதிய காரை தருவதாக மாருதி டீலர் கூறி இருப்பது மாருதி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் விஷயமாகவே பார்க்க முடியும். விற்பனை மற்றும் பழுதுநீக்கும் சேவையில் மாருதி முன்னிலையில் இருப்பதற்கு இந்த சம்பவமும் சாட்சியாகவே கூற முடியும்.
Picture Credit: Facebook


Click it and Unblock the Notifications








